அமீரக செய்திகள்

துபாயில் Dh696 மில்லியன் செலவில் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டம்..!! எங்கே தெரியுமா?

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எமிரேட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்த ஐந்து புதிய பாலங்கள் மற்றும் துபாயின் சின்னமான டிரேட் சென்டர் ரவுண்டானாவை பிரதான மேற்பரப்பு சந்திப்பாக (surface intersection) மாற்றுவதற்கான மேம்பாட்டுத் திட்டத்திற்கு சுமார் 696 மில்லியன் திர்ஹம்ஸ் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.

துபாயின் பழமையான அடையாளங்களில் ஒன்றான இந்த ரவுண்டானா, ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட், ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட், செகண்ட் டிசம்பர் ஸ்ட்ரீட், ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட் மற்றும் அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட் ஆகிய ஐந்து முக்கிய ஸ்ட்ரீட்களுடன் ஷேக் சையத் சாலையை இணைக்கிறது.

சீரான போக்குவரத்து ஓட்டம்

RTA வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சுமார் 5,000 மீட்டர் நீளத்திற்கு ஐந்து பாலங்களை நிர்மாணிப்பது மற்றும் ஷேக் சையத் சாலையில் இருந்து செகண்ட் டிசம்பர் ஸ்ட்ரீட் வரை உள்வரும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள ரவுண்டானாவை மேற்பரப்பு சந்திப்பாக மாற்றுவது மற்றும் அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட்டில் இருந்து ஷேக் சையத் சாலை வரை தெற்கு நோக்கி செல்லும் போக்குவரத்தை மேம்படுத்துவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கத்தில் அடங்கும் என்பது தெரிய வந்துள்ளது.

Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal

மேலும், இந்த மேம்பாட்டுத் திட்டம் செகண்ட் டிசம்பர் ஸ்ட்ரீட்டில் தெருவில் இருந்து (ஜுமைரா மற்றும் அல் சத்வா) அல் மஜ்லஸ் ஸ்ட்ரீட் வரை அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட் (DWTC மற்றும் DIFC சேவை) மற்றும் ஷேக் ரஷித் ஸ்ட்ரீட்டில் இருந்து தேரா வரை சுமூகமான போக்குவரத்தை எளிதாக்கும் RTA அதிகாரிகள் கூறியுள்ளனர். கூடுதலாக, இந்த திட்டம் ஷேக் சையத் சாலையில் இருந்து ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட் வரையிலான மேல் நிலை பாலத்தில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யும் என்று RTA தெரிவித்துள்ளது.

tarde-centre-roundabout-1730011500268

இது குறித்து RTAவின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர், இயக்குநர் ஜெனரல், மட்டர் அல் டயர் பேசிய போது, இத்திட்டம் ரவுண்டானா சந்திப்பின் போக்குவரத்துத் திறனை இரட்டிப்பாக்குவதுடன் பயண நேரத்தை 12 நிமிடங்களில் இருந்து 90 வினாடிகளாக குறைக்கும் என்றும், மேலும் ஷேக் சையத் சாலையிலிருந்து ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட் வரையிலான பயண நேரத்தை 6 நிமிடங்களில் இருந்து ஒரு நிமிடமாக குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

டிரேட் சென்டர் மேம்பாட்டுத் திட்டம் வருகின்ற நவம்பரில் தொடங்கப்படும் என்று கூறிய அவர், இது அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டத்தையும் உள்ளடக்கிய ஒரு பரந்த மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “இந்த திட்டம் GITEX, அரேபிய பயண சந்தை, அரபு சுகாதாரம் மற்றும் கல்ஃபுட் கண்காட்சிகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்தும் DWTC உட்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு சேவை செய்வதாகவும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் முன்னணி நிதி மையமான DIFC க்கும், ஜபீல், அல் சத்வா, கராமா, ஜாஃபிலியா மற்றும் மன்கூல் போன்ற சமூகங்களுக்கும் சேவை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ஏறத்தாழ அரை மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Tradecentre

ஐந்து பாலங்கள்

இந்த திட்டத்தில் பல்வேறு திசைகளில் தடையற்ற போக்குவரத்தை வழங்கும் ஐந்து பாலங்களின் கட்டுமானம் அடங்கும்:

  • ஷேக் சையத் சாலையில் இருந்து ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட் வரை சுமார் 1,000 மீட்டர் நீளமுள்ள மேல் மட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 3,000 வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் தேராவை நோக்கி இருவழிப் பாலம் கட்டப்படும்.
  • ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட்டை செகண்ட் டிசம்பர் ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும் வகையில் 2,000 மீட்டர் நீளமுள்ள இரண்டு இருவழிப் பாலங்கள் அமைக்கப்படும். இது ஒரு மணி நேரத்திற்கு 6,000 வாகனங்களை அனுமதிக்கும்.
  • அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட்டை செகண்ட் டிசம்பர் ஸ்ட்ரீட்டுடன் இணைக்க அல் மஜ்லஸ் ஸ்ட்ரீட்டில் இருந்து செகண்ட் டிசம்பர் ஸ்ட்ரீட் வரை சுமார் 2,000 மீட்டர் நீளமுள்ள இரண்டு இருவழிப் பாலங்கள் கட்டப்படும். இது ஒரு மணி நேரத்திற்கு 6,000 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.

ஒரே நேரத்தில் இரண்டு திட்டங்கள்

DWTC ரவுண்டானா மேம்பாட்டுத் திட்டம், இப்பகுதியில் மற்றொரு சாலை மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அல் டயர் கூறியுள்ளார். RTA சமீபத்தில் ஓத் மேத்தா மற்றும் அல் அசயேல் ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இதில் நான்கு பெரிய இன்டர்செக்‌ஷன்களை மேம்படுத்துதல் மற்றும் 4,300 மீட்டர் நீளமுள்ள பாலங்கள் மற்றும் 14 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

இந்தத் திட்டம் 2030 ஆம் ஆண்டுக்குள் 420,000 மக்கள்தொகைக்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குடியிருப்பு மற்றும் புதிய மேம்பாட்டுப் பகுதிகளுக்கு சேவை செய்யும் என்று கூறப்படுகிறது. அத்துடன் இது பயண நேரத்தை 20 நிமிடங்களிலிருந்து ஐந்து நிமிடங்களாகக் குறைக்கும் மற்றும் 75 சதவிகிதம் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, அல் கைல் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் அனைத்து கட்டங்களையும் திறக்கும் திட்டத்துடன் ஆணையம் இணைந்துள்ளது, இதில் 3,300 மீட்டர் நீளமுள்ள பாலங்கள் மற்றும் அல் கைல் சாலையில் ஏழு வெவ்வேறு இடங்களில் 6,820 மீட்டர் நீளமுள்ள பாதைகளை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த திட்டம் பயண நேரத்தை 30 சதவீதம் குறைக்கும் என்றும், தற்போதைய சந்திப்புகள் மற்றும் பாலங்களின் திறனை ஒரு மணி நேரத்திற்கு சுமார் 19,600 வாகனங்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!