துபாயில் பொது பார்க்கிங் கட்டண முறையில் மாற்றம்.. 25 திர்ஹம் வரை கட்டணம் உயர்வு.. RTA அறிவிப்பு..!!
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நகரத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, மாறுபட்ட சாலை கட்டண விலை (Variable Road Toll Pricing – salik) மற்றும் மாறுபட்ட பார்க்கிங் கட்டணக் கொள்கைகளை (Variable Parking Tariff Policies) செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
அதில், சாலிக் கேட் வழியாக பயணிக்க மாறுபட்ட கட்டண முறை நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது பீக் ஹவர்ஸில் 6 திர்ஹம்ஸ் கட்டணம், நெரிசல் இல்லாத நேரங்களில் 4 திர்ஹம்ஸ் கட்டணம் மற்றும் நள்ளிரவு நேரத்தில் கட்டணமின்றி இலவச பயணம் உள்ளிட்ட மாறுபட்ட கட்டணங்களை ஜனவரி 2025 முதல் தொடங்கவுள்ளதாக RTA கூறியுள்ளது.
சாலிக் கட்டணத்தைப் போலவே, மார்ச் 2025 இன் இறுதிக்குள் மாறுபட்ட பார்க்கிங் கட்டணக் கொள்கையை தொடங்கவுள்ளதாகவும் RTA அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, பிரீமியம் பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 6 திர்ஹம் என்றும், காலை 8 மணி முதல் 10 மணி வரை பீக் ஹவர்ஸ் மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பீக் ஹவர்ஸ் ஆகியவற்றில் மற்ற பொது கட்டண பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 4 திர்ஹம் என்றும் பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை, நெரிசல் இல்லாத நேரங்களில் கட்டணங்கள் மாறாமல் இருக்கும். அதேசமயம், இரவு, 10 மணி முதல் காலை 8 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் பார்க்கிங் இலவசம் என்று கூறப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅதேபோல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளுக்கான ‘நெரிசல் விலைக் கொள்கை’ எனும் புதிய முறையையும் RTA கொண்டுவரவுள்ளது. அதனபடி, முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் மண்டலங்களுக்கு அருகில் பொது கட்டண பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 25 திர்ஹம்ஸ் கட்டணம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தக் கொள்கையானது துபாய் வேர்ல்டு ட்ரேட் சென்டரைச் சுற்றி, பிப்ரவரி 2025 இல் தொடங்கும் முக்கிய நிகழ்வுகளின் போது தொடங்கப்படும் என்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான RTA கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel