அமீரக செய்திகள்

அமீரகத்தின் புதிய அறிவிப்பு.. திருமணத்திற்கு முன்பு தம்பதிகளுக்கு மரபணு சோதனை கட்டாயம்..!! ஜனவரி முதல் அமல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய விதிமுறைகளும், திருத்தப்பட்ட சட்டங்களும் மற்றும் புதிய நடைமுறைகளும் அமலுக்கு வரவுள்ளன. அவற்றில் ஒன்றாக இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து அமீரக குடிமக்களுக்கும் திருமணத்திற்கு முந்தைய மரபணு சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்பு, அமீரகம் முழுவதும் திருமணம் செய்து கொள்ள விரும்பும் அனைத்து குடிமக்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் திருமணத்திற்கு முந்தைய மருத்துவ பரிசோதனை கட்டாயமாக இருந்தது. அதேசமயம் திருமணத்திற்கு முன்னதாக, மரபணு சோதனை அவரவர் விருப்பத்திற்குரியதாக இருந்தது. ஆனால், வருகின்ற ஜனவரி 2025 முதல் மரபணு சோதனை கட்டாய திருமணத்திற்கு முந்தைய விதிகளில் ஒரு பகுதியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் வருடாந்திர கூட்டங்களின் போது அங்கீகரிக்கப்பட்ட எமிரேட்ஸ் ஜீனோம் கவுன்சிலின் (Emirates Genome Council) முடிவைப் பின்பற்றி இந்த முயற்சி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

‘UAE Centennial Vision 2071’க்கு இணங்க, நாட்டில் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்ய எதிர்கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்த முடிவு சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

திருமணம் செய்ய உள்ள எமிராட்டிகளுக்கு மரபணு பரிசோதனையை செயல்படுத்த, அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் நெருக்கமான ஒத்துழைப்புடன், ஒரு ஒருங்கிணைந்த தேசிய குழுவாக செயல்படுவதாக அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது, மேலும், தேசிய ஜீனோம் உத்திக்கு ஏற்ப, மருத்துவ பணியாளர்கள், சிறப்பு நிபுணத்துவம், வழிகாட்டுதல்கள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, உயர் அதிகாரி ஒருவர் செய்தி ஊடகம் ஒன்றில் பேசுகையில், கார்டியோமயோபதி (cardiomyopathy), மரபணு கால்-கை வலிப்பு (genetic epilepsy), முதுகெலும்பு தசைச் சிதைவு (spinal muscular atrophy), செவித்திறன் இழப்பு, சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (cystic fibrosis) மற்றும் “சிகிச்சையளிக்க கடினமாக இருக்கும் பிற கடுமையான மற்றும் நாள்பட்ட நோய்கள்” போன்ற பரம்பரை நோய்களை ஏற்படுத்தக்கூடிய 570 க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களை மரபணு சோதனை மூலம் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு ஒருங்கிணைந்த தேசிய மரபணு தரவுத்தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த மூலோபாய முயற்சியானது, எமிராட்டிகள் மத்தியில் மரபணு நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவுவதுடன், ஆரம்பகால மருத்துவ தலையீட்டை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த மரபணு சோதனை அமீரக குடிமக்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட போதிலும் அமீரகத்தில் திருமணம் செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!