சவுதி இளவரசர் தனிப்பட்ட பயணமாக அமீரகத்திற்கு வருகை..!! விமான நிலையத்தில் வரவேற்ற அமீரக அதிபர்..!!
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் அவர்கள், தனிப்பட்ட பயணமாக நேற்று டிசம்பர் 1ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்ததாக சவுதி செய்தி நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.
அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், விமான நிலையத்தில் வந்திறங்கிய சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை கட்டியணைத்து வரவேற்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பின்னர், இரு தலைவர்களும் அல் அய்னில் உள்ள அல் ரவ்தா அரண்மனையில், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறுதியான சகோதர உறவுகளை பிரதிபலிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அமீரக அதிபர் இரவு விருந்து அளித்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் 53வது தேசிய தினத்தை முன்னிட்டு அமீரக அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த சவுதி பட்டத்து இளவரசர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதன் மக்களுக்கு மேலும் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஏற்பட தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
சவுதி செய்தி நிறுவனம் (SPA) வெளியிட்டுள்ள செய்திகளின் படி, இரு தலைவர்களும் மத்திய கிழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்துள்ளனர். அத்துடன் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான கூட்டு அரபு நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும், இரு நாடுகளின் தீர்வு அடிப்படையில் விரிவான மற்றும் நீடித்த அமைதிக்கான வழியை கண்டறிய உழைப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், ரியாத்தில் நடைபெறும் அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டில் (Arab-Islamic summit) கலந்து கொள்ளுமாறு சவுதி இளவரசர் அமீரக அதிபர் ஷேக் முகமதுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு முன்னதாக சமீபத்தில் சவுதி தேசிய தினத்தின் போது, இரு நாடுகளும் நீண்டகாலமாக நட்பின் ஆழமான பிணைப்புகளை பகிர்ந்து கொள்வதை மேற்கோள்காட்டி தனது வாழத்துகளையும் அமீரக அதிபர் தெரிவித்திருந்தார்.
சவூதி இளவரசர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அமீரகத்திற்கு வருகை தந்திருக்கிறார். 2021 ஆம் ஆண்டில், அவர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அபுதாபிக்கு வந்திருந்தார், அப்போது அபுதாபியின் பட்டத்து இளவரசராக இருந்த ஷேக் முகமது அவர்கள் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel