அமீரக தேசிய தினத்தன்று நாட்டின் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு நன்றி தெரிவித்த அதிபர் ஷேக் முகம்மது!!
ஐக்கிய அரபு அமீரகம் இன்று (டிசம்பர் 2, திங்கள்கிழமை) அதன் 53வது தேசிய தினத்தை அனுசரிக்கும் வேளையில், அமீரக அதிபர் ஷேக் முகம்மது அவர்கள், வெளிநாட்டவர்களுக்கும், குடிமக்களுக்கும் தேசிய தினத்தன்று தனது கையால் எழுதப்பட்ட குறிப்பில் இதயப்பூர்வமான நன்றி தெரிவித்துள்ளார்.
ஷேக் முகமது எழுதிய செய்திக் குறிப்பில், “உங்கள் உறுதிக்கு நன்றி. உங்கள் முயற்சிகளுக்கு நன்றி. இந்த தேசத்திற்காக நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். மேலும், தேசிய தினத்தன்று, X தளத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், “இந்த ஈத் அல் எதிஹாத் தினத்தில், நாங்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதன் மக்கள், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் குறித்து பெருமை கொள்கிறோம்” என்று எழுதியுள்ளார்.
அமீரகமானது டிசம்பர் 2, 1971 அன்று துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ஃபுஜைரா, உம் அல் குவைன் மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய எமிரேட்ஸ் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு அமீரகமாக உருவானதை ஒவ்வொரு ஆண்டும் தேசிய தினமாகக் கொண்டாடுகிறது. இந்த நிலையில் அமீரக தேசிய தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் குழு, இந்த நிகழ்விற்கான அதிகாரப்பூர்வ பெயரை ‘ஈத் அல் எதிஹாத்’ என்று அறிவித்துள்ளது.
இந்த பெயர் ‘யூனியன்’ என்ற கருப்பொருளை வலியுறுத்துகிறது. கருப்பொருள் நாட்டின் “அடையாளம், பாரம்பரியம், ஒற்றுமை, வலிமை மற்றும் தேசியப் பெருமை ஆகியவற்றைக் குறிக்கிறது”. தேசிய தினத்தையொட்டி அமீரகம் முழுவதும் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படும் நிலையில் இந்தாண்டு தேசிய தினத்தின் உத்தியோகபூர்வ விழா அல் அய்னின் இயற்கை நிலப்பரப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் என்றும் என்று குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மக்கள் டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய தின விடுமுறை 2024 இன் கொண்டாட்டங்களை உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள், திரையரங்குகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது இடங்களில் நேரடியாகப் பார்க்கலாம் என்றும் குழு கூறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel