எதிஹாத் ரயிலின் புதிய அதிவேக எலெக்ட்ரிக் ரயில்!! துபாயிலிருந்து அபுதாபிக்கு 30 நிமிடங்களில் பயணம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ரயில் நெட்வொர்க்கான எதிஹாத் ரயில் அதன் புதிய அதிவேக எலெக்ட்ரிக் பயணிகள் ரயிலின் விபரங்களை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. அதாவது மணிக்கு சுமார் 350 கிமீ வேகத்தில் இயங்கும் இந்த அதிவேக ரயில் மூலம், துபாயிலிருந்து அபுதாபிக்கு 30 நிமிடங்களில் பயணிக்கலாம் என்றும் எதிஹாத் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கமான பயணிகள் ரயில் எப்போதும் போல இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்களில், இந்த அதிவேக ரயில் நெட்வொர்க் ஆனது அபுதாபியில் உள்ள ரீம் ஐலேண்ட், சாதியாத் ஐலேண்ட், யாஸ் ஐலேண்ட், சையத் சர்வதேச விமான நிலையம், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் மற்றும் துபாயில் உள்ள அல் ஜதாஃப் பகுதி ஆகிய ஆறு நிலையங்கள் வழியாகப் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக ரயில் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு அனைத்தும் டெண்டர்கள் முடிந்த பிறகு கட்டப்படும் என்றும், எப்போது தயாராகும் என்ற காலவரம்பு மதிப்பிடப்படவில்லை என்றும் அபுதாபியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய எதிஹாத் ரெயிலின் தலைமை திட்ட அதிகாரி முகமது அல் ஷெஹி தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய அதிவேக ரயில் அடுத்த ஐந்து தசாப்தங்களில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 145 பில்லியன் திர்ஹம்ஸ்களை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடிய வழக்கமான பயணிகள் ரயில் அனைத்து எமிரேட்களையும் இணைக்கும். 400 பயணிகளுக்கு இடமளிக்கக்கூடிய இது சரக்கு ரயில்களைப் போன்ற அதே ரயில் பாதையைக் கொண்டுள்ளது.
அத்துடன் அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் புஜைரா ஆகிய நான்கு நிலையங்களை எதிஹாத் ரயில் நெட்வொர்க் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் முழுமையாக பொருத்தப்பட்டு தயாராக உள்ள போதிலும், அது எப்போது இயக்கப்படும் என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel