துபாய்-ஹத்தா பேருந்து சேவை: பஸ் ரூட் முதல் நேரம், டிக்கெட் விலை வரை முழு விபரம் உள்ளே…

எப்போதும் பரபரப்பாக இருக்கும் துபாயில் வசிக்கும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வாரஇறுதி மற்றும் விடுமுறை நாட்களில் அமைதியான இயற்கைக் காட்சியை ரசித்தவாறே ஓய்வெடுக்க விரும்புகிறார்கள். அத்தகைய இயற்கைக் காட்சிக்கு பெரும்பாலானோர் ஹத்தாவை தேர்வு செய்கிறார்கள். துபாயிலிருந்து ஹத்தாவிற்கு சாலைப் பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்கள், இப்போது RTAஆல் இயக்கப்படும் ஹத்தா எக்ஸ்பிரஸ் பேருந்தைத் தேர்வு செய்வதன் மூலம் ஓட்டும் சிரமமின்றி மலைப்பகுதிகளுக்குச் செல்லும் சாலைப் பயணத்தை அனுபவிக்கலாம். ஹத்தாவுக்குச் செல்லும் பேருந்தை எங்கே பிடிப்பது, வழித்தடங்கள், நேரம் மற்றும் டிக்கெட் விலை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
பேருந்து நேரங்கள் மற்றும் வழிகள்
துபாய் முதல் ஹத்தா வரையிலான RTA பேருந்து சேவை இரண்டு வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன, அவை ஹத்தா மற்றும் துபாய் இடையே பயணிக்க அனுமதிக்கிறது.
ஹத்தா எக்ஸ்பிரஸ்
‘ஹத்தா எக்ஸ்பிரஸ்’ என்ற முதல் வழித்தடமானது, துபாய் மால் ஸ்டேஷனில் இருந்து தொடங்கும், அங்கிருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு பஸ் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூட் ஒன் (H02) பேருந்து தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும், எனவே வாரத்தின் எந்த நாளிலும் பேருந்தில் ஏறலாம்.
மேலும், பேருந்து நேராக ஹத்தா பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போது டீலக்ஸ் பெட்டிகளை வழங்குவதால் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும். நீங்கள் துபாய் மாலில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பகுதியில் இருந்து வருபவர்களாக இருந்தால், அதற்கேற்ப உங்கள் பயண நேரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள், எனவே நீங்கள் பேருந்தை தவறவிட மாட்டீர்கள்.
ஹாப் ஆன் ஹாப் ஆஃப் (hop on hop off) சேவை
இரண்டாவது வழி, சுற்றுலா சிறப்பு பேருந்து சேவையான, ‘ஹத்தா ஹாப் ஆன் ஹாப் ஆஃப்’. இந்த சிறப்பு பயணம், ‘ரூட் டூ’ (H04), ஹத்தா பேருந்து நிலையத்தில் தொடங்கி அங்கேயே முடிவடையும் ஒரு சுற்றுப் பாதையாகும்.
இந்த பயணம் தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கிடைக்கும் மற்றும் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஹத்தா பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஹத்தா வழியாக பயணித்து, ஹத்தா டேம், ஹத்தா ஹெரிட்டேஜ் வில்லேஜ், ஹத்தா வாடி ஹப் மற்றும் ஹத்தா ஹில் பார்க் போன்ற முக்கிய இடங்களில் நிறுத்தப்படும்.
நீங்கள் ஒரு நாள் பயணத்தைத் தொடங்க திட்டமிட்டு, அதே நாளில் மீண்டும் துபாய்க்குச் செல்ல விரும்பினால், இரவு 7 மணிக்குள் ஹத்தா பேருந்து நிலையத்தை அடைந்துவிடுங்கள், ஏனெனில் அதுவே துபாய்க்கு புறப்படும் கடைசி பேருந்து ஆகும்.
பயண நேரம்
RTAவின் படி, துபாய் மால் ஸ்டேஷனிலிருந்து ஹத்தா பேருந்து நிலையத்தை அடைய சுமார் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். எனவே, ஹத்தாவிற்கு சென்றடைவதற்கு முன்பு சுமார் 90 நிமிடங்கள் ஓய்வெடுத்தவாறே பயணிக்கலாம். துபாய்க்கு திரும்பி வருவது அதே நேரமாக இருக்கும், எனவே வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு பேருந்தில் ஓய்வெடுக்க மற்றொரு 90 நிமிடங்கள் உங்களுக்கு இருக்கும்.
டிக்கெட் விலை
‘ஹத்தா எக்ஸ்பிரஸ்’ சேவைக்கு, நீங்கள் ஹத்தாவை அடைய ஒரு 25 திர்ஹம்ஸ் கட்டணத்தையும், துபாய்க்கு மீண்டும் வர மற்றொரு 25 திர்ஹம்ஸ் மட்டுமே செலுத்த வேண்டும். ‘ஹத்தா ஹாப் ஆன் ஹாப் ஆஃப் ரூட்’ க்கு, கட்டணம் பேருந்து நிறுத்தத்திற்கு 2 திர்ஹம்ஸ் வீதம் செலவாகும். உங்கள் NOL கார்டு மூலம் பயணத்திற்கு பணம் செலுத்தலாம், அல்லது நீங்கள் நேரடியாக ஓட்டுநருக்கு பணம் செலுத்தலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel