துபாயில் பாரக்கிங் கட்டணத்தை செலுத்த புதிய வசதிகள்..!! விரைவில் அறிமுகம்.!!

துபாயில் கட்டண பொது பார்க்கிங் வசதிகளை நிர்வகிக்கும் ‘Parkin PJSC’ நிறுவனம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், அதன் சேவைகளில் ஆட்டோபே எனும் தானியங்கி கட்டண மற்றும் பே-லேட்டர் ஆகிய அம்சங்களைச் சேர்க்கத் திட்டமிட்டு வருவதாக அந்நிறுவனம் X தளத்தில் தெரிவித்துள்ளது. துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் டயர் அவர்கள் பார்கின் அலுவலகங்களுக்குச் சென்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பார்கின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அப்துல்லா அல் அலி அவர்கள் தலைமையிலான அதிகாரிகள், துபாய் முழுவதும் பார்க்கிங் உள்கட்டமைப்புக்கான விரிவாக்கத் திட்டத்தை வகுத்ததாகவும், மேம்பட்ட ஸ்மார்ட் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பை சிறப்பித்துக் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தினசரி 500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் தொடர்புகளுக்கு இடமளிக்கும் புதிய வாடிக்கையாளர் அழைப்பு மையத்தையும் அவர்கள் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, “புதுமை, சேவை சிறப்பு மற்றும் துபாயில் போக்குவரத்து மேலாண்மை தீர்வுகளில் தீவிரமாக பங்களிப்பதில் எங்களின் உறுதிப்பாட்டை இந்த வருகை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று பார்கின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தின்போது எரிபொருள் நிரப்புதல், கார் கழுவுதல்
கார் கழுவுதல், மொபைல் அல்லது ஆன்-தி-கோ எரிபொருள் நிரப்புதல், என்ஜின் எண்ணெய் மாற்றம், டயர் சோதனைகள், பேட்டரி ஆய்வுகள் மற்றும் பிற அத்தியாவசிய வாகன பராமரிப்பு சேவைகள் உள்ளிட்ட வாகன சேவைகளை துபாயில் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் அணுகலாம் என்று கடந்த வாரம் பார்கின் அறிவித்திருந்தது.
அதுமட்டுமல்லாமல், நிறுவனம் அதன் செயல்பாடுகளை தீவிரமாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டின் இறுதியில், சவுதி சந்தையில் கட்டண வாகன நிறுத்துமிட சேவைகளை விரிவுபடுத்துவதற்காக, உள்நாட்டு வாகன நிறுத்தம் துறையில் ஆர்வமுள்ள சவுதியை தளமாகக் கொண்ட ஒரு முக்கிய நிறுவனத்துடன் விவாதித்து வருவதாகவும் அல் அலி செய்தி ஊடகம் ஒன்றுக்கு முன்பு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel