அமீரகத்தில் விற்கப்படும் ‘Lay’s சிப்ஸ்கள் பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்கிறதா?? அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு…

US உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA- Food and Drug Administration) சமீபத்தில் லேஸ் கிளாசிக் உருளைக்கிழங்கு சிப்ஸை திரும்பப் பெறுவதாக கூறியது. மேலும் இதன் ஆபத்து அளவை மிக உயர்ந்ததாக (class I) அறிவித்தது. டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய இந்த திரும்பப் பெறுதல், ஒரேகான் மற்றும் வாஷிங்டனில் விநியோகிக்கப்பட்ட 6,344 லேஸ் பைகளை உள்ளடக்கியது.
இந்த உருளைக்கிழங்கு சீவல்களில் அறிவிக்கப்படாத பால் பொருட்கள் இருக்கலாம் என்று அமெரிக்க உணவு நிறுவனமான ஃபிரிட்டோ-லே அறிவித்தது. மேலும், பால் பொருட்களுக்கு ஒவ்வாமை அல்லது கடுமையான அலர்ஜி உள்ளவர்கள், இந்த தயாரிப்பை உட்கொண்டால் தீவிரமான அல்லது உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை ஏற்படும் அபாயத்திற்கு ஆளாவார்கள் என்று FDA டிசம்பர் 16 அன்று கூறியது.
இதன் விளைவாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் Lay’s என்ற உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்புகள் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப தேவைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குகின்றன என்று காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் (MOCCAE) இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
அறிவிக்கப்படாத பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கலாம் என்பதன் காரணமாக சில லேஸ் தயாரிப்புகளை திரும்பப் பெறுவது பற்றிய US FDAயின் சமீபத்திய அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக அமைச்சகம் X தளத்தில் ஒரு பதிவில் கூறியுள்ளது.
மேலும் அனைத்து உணவுப் பொருட்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்கப்படுவதற்கு முன்னர் கடுமையான பதிவு மற்றும் ஆய்வு செயல்முறைகளுக்கு உட்படுத்த்வதன் மூலம், அவை கடுமையான பாதுகாப்புத் தரங்களைச் சந்திப்பதையும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதையும் உறுதிசெய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, நுகர்வோர்களாகிய பொதுமக்களுக்கு ஆணையம் உறுதியளித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகம் அதன் சந்தைகளில் விற்கப்படும் பொருட்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஜனவரி 30 அன்று, நாட்டில் உள்ள Coca-Cola பானங்கள் நுகர்வுக்கு பாதுகாப்பானவை மற்றும் அதிக அளவு குளோரேட் இல்லாதவை என்பதை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. கோகோ-கோலாவின் ஐரோப்பிய பாட்டிலிங் பிரிவு ஜனவரி 29 அன்று கோக், ஸ்ப்ரைட், ஃபாண்டா மற்றும் பிற பானங்களை அதிக குளோரேட் அளவுகள் காரணமாக திரும்பப் பெற உத்தரவிட்ட பிறகு அமீரக அரசு இதனை அறிவித்திருந்தது.
அதேபோல், ஜனவரி 22 ஆம் தேதி, பல்பொருள் அங்காடிகளில் இருந்து திரும்பப் பெறப்பட்ட பெப்பரோனி மாட்டிறைச்சி பொருட்களை உட்கொள்வது பாதுகாப்பானது என்று அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel