துபாயின் நான்கு பகுதிகளில் பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு.. கட்டண நேரமும் நீட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு…

துபாய் முழுவதும் கட்டண பொது பார்க்கிங் வசதிகளை நிர்வகிக்கும் பார்க்கின் PJSC நிறுவனம், எமிரேட்டில் F பார்க்கிங் மண்டலங்கள் முழுவதும் கட்டண பார்க்கிங் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ள நிலையில், இது அனைத்து F பார்க்கிங் மண்டலங்களுக்கும் பொருந்தும் என்று பார்க்கின் தெரிவித்துள்ளது. அதன்படி, அல் சுஃபூஹ் 2, தி நாலேஜ் வில்லேஜ், துபாய் மீடியா சிட்டி மற்றும் துபாய் இன்டர்நெட் சிட்டி போன்ற பகுதிகள் இதில் அடங்கும்.
புதிய கட்டணங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
- 30 நிமிடங்கள் – 2 திர்ஹம்ஸ்
- 1 மணிநேரம் – 4 திர்ஹம்ஸ்
- 2 மணி நேரம் – 8 திர்ஹம்ஸ்
- 3 மணி நேரம் – 12 திர்ஹம்ஸ்
- 4 மணி நேரம் – 16 திர்ஹம்ஸ்
- 5 மணி நேரம் – 20 திர்ஹம்ஸ்
- 6 மணி நேரம் – 24 திர்ஹம்ஸ்
- 7 மணி நேரம் – 28 திர்ஹம்ஸ்
- 24 மணிநேரம் – 32 திர்ஹம்ஸ்
மேலும், இந்த மண்டலத்தில் கட்டண பார்க்கிங் நேரங்களும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன, முன்பு கட்டண பார்க்கிங் காலம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்ட மாறுபட்ட பார்க்கிங் கட்டணக் கொள்கையின் (Variable Parking Tariff Policies) அறிவிப்புக்குப் பிறகு இந்த கட்டணமும் நேர அதிகரிப்பும் வந்துள்ளது.
RTA வெளியிட்ட அறிவிப்பின்படி, பிரீமியம் பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 6 திர்ஹம் என்றும், காலை 8 மணி முதல் 10 மணி வரை பீக் ஹவர்ஸ் மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பீக் ஹவர்ஸ் ஆகியவற்றில் மற்ற பொது கட்டண பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 4 திர்ஹம் என்றும் பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை, நெரிசல் இல்லாத நேரங்களில் கட்டணங்கள் மாறாமல் இருக்கும். அதேசமயம், இரவு, 10 மணி முதல் காலை 8 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் பார்க்கிங் இலவசம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளுக்கான ‘நெரிசல் விலைக் கொள்கை’ எனும் புதிய முறையையும் RTA கொண்டுவரவுள்ளது. அதன்படி, முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் மண்டலங்களுக்கு அருகில் பொது கட்டண பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 25 திர்ஹம்ஸ் கட்டணம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
துபாயில் பார்க்கிங் மண்டலங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன, இதில் மொத்தம் 11 மண்டலங்கள் A முதல் K வரை பெயரிடப்பட்டுள்ளன. குறிப்பாக, கார் பார்க்கிங் மண்டலங்கள் கமெர்ஷியல், நான்-கமெர்ஷியல் மற்றும் சிறப்பு பகுதிகள் என மூன்று முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன . ஒவ்வொரு மண்டலத்திலும் குறிப்பிட்ட பார்க்கிங் விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் உள்ளன, எனவே, ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel