UAE: கோலாகலமாக துவங்கிய ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல்!! 12 இடங்களில் வண்ணமயமான ஒளிக் காட்சிகள் இடம்பெறும் என தகவல்…

ஷார்ஜாவின் வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றான ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல் அதன் 14 வது பதிப்பில் அடியெடுத்து வைத்திருப்பதால், எமிரேட் முழுவதும் 12 இடங்களில் உள்ள அடையாளங்கள் வண்ணமயமான விளக்குகளில் ஒளிரவுள்ளது. ஷார்ஜா அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த ஒளித் திருவிழா (light festival) பிப்ரவரி 5 முதல் 23 வரை 18 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு, சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான ஷேக் டாக்டர். சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் ஆதரவின் கீழ் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வருடத்திற்கான பதிப்பின் முதல் நாளான நேற்று (புதன்கிழமையன்று), ஷார்ஜா ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பூங்காவில் ட்ரோன்கள் மற்றும் விளக்குகளின் கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் பிரகாசமான லைட் ஃபெஸ்டிவல் கோலாகலமாகத் துவங்கியதாகவும், வானத்தில் ஷார்ஜா ஆட்சியாளரின் உருவப்படத்தை வரையும் ட்ரோன்கள் முதல், இசையின் தாளத்திற்கு நடனமாடும் விளக்குகள் வரை பலவிதமான ஒளி நிகழ்ச்சிகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், ‘Smile, You Are in Sharjah’ என்ற ஷார்ஜாவின் செய்தியை ட்ரோன்கள் காட்சிப்படுத்தியதுடன் விழாவின் முதல் நாள் நிறைவடைந்துள்ளது.
நுழைவு கட்டணம்
‘Lights of Unit’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த ஆண்டு ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல் பல கலைஞர்களின் படைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ள ஒளி நிகழ்ச்சிகளை அனைவரும் இலவசமாகக் கண்டுகளிக்கலாம். இருப்பினும், லைட் வில்லேஜ் போன்ற முக்கிய ஈர்ப்பிற்கு 10 திர்ஹம்ஸ் நுழைவுக் கட்டணம் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒளிரும் இடங்கள்
இந்த ஃபெஸ்டிவல் ஷார்ஜா எமிரேட் முழுவதிலும், கிழக்கு கடற்கரை நகரங்களான திப்பா, கோர்பக்கன் மற்றும் கல்பா வரை பரவியுள்ளது. இந்த ஆண்டு திருவிழாவின் வழக்கமான இடங்களில் SRTIP, அல் கல்பா, அல் ஜடா மற்றும் அல் ஹீரா கடற்கரை ஆகியவற்றில் உள்ள அல் ஹெஃபையா ஏரி ஆகிய நான்கு புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள் ஒளிரும் நிறுவல்களைக் காணக்கூடிய அனைத்து 12 இடங்களின் பட்டியலும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
- ஷார்ஜா ஆராய்ச்சி தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பூங்கா (Sharjah Research, Technology and Innovation Park)
- அல் ரஃபிசா டேம்
- அல் ஹெஃபாயே ஏரி – கல்பா
- ஷார்ஜா மசூதி
- BEEAH தலைமையகம்
- அல் தைத் ஃபோர்ட்
- அல் ஹம்ரியா நியூ ஜெனரல் சூக்
- மஜாஸ் வாட்டர்ஃபிரண்டல் ஹீரா கடற்கரை
- அல் தயாரி மசூதி
- அல் ஹீரா கடற்கரை
- அல் ஜதா
- யுனிவரிஸ்டி சிட்டி ஹால்
‘The Journey of the Light of Knowledge and Art’ என்ற தலைப்பில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியுடன் ஷார்ஜா மசூதியின் சுவர்கள் ஓவியங்களாக மாற்றப்படுவதைக் காணலாம். மேலும், கோர் ஃபக்கனில் உள்ள அல் ரபிசா டேமில், ‘ Light of the East’ என்ற 3டி ப்ரொஜெக்ஷன் ஷோ நகரத்தின் கதையை விவரித்து அதன் நிலப்பரப்புகளின் அழகை முன்னிலைப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
லைட் வில்லேஜில் என்ன எதிர்பார்க்கலாம்?
ஷார்ஜாவின் யுனிவர்சிட்டி சிட்டி ஹாலுக்கு வெளியே அமைந்துள்ள தி லைட் வில்லேஜ் இந்த ஆண்டு திருவிழாவின் முக்கிய அம்சமாகும். இதன் உள்ளே, சிறப்பு காஃபி முதல் உயர் மதிப்பிடப்பட்ட பர்கர் இடங்கள் வரை பலவிதமான உணவு வகைகளை வழங்கும் 50 க்கும் மேற்பட்ட உணவு டிரக்குகளின் வரிசை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை
பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 10 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 11 வயதிற்குட்பட்ட குழந்தைகள், மாற்று திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்கள் இலவசமாக நுழையலாம். இங்கு அடிக்கடி பார்வையிடத் திட்டமிடுபவர்கள் ஒரு முழு சீசன் பாஸைத் தேர்வுசெய்யலாம், இது 120 திர்ஹம்ஸ்க்கு கிடைக்கிறது. இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் அல்லது அதன் வாயில்களில் வாங்கலாம்.
திருவிழாவின் பிரபலத்தைக் கருத்தில் கொண்டு, டிக்கெட் வாங்குவதற்கான செயல்முறையை எளிதாக்க இரண்டு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருப்பதாக ஷார்ஜா வர்த்தக மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் P.R மற்றும் ஊடக உறவுகளின் தலைவர் அலியா அல்சூகி கூறியுள்ளார்.
மேலும், அங்கு பார்வையாளர்களுக்கு வேலட் மற்றும் இலவச பார்க்கிங் விருப்பங்கள் இருக்கும். இருப்பினும், விருந்தினர்கள் மாலை 6 மணிக்கு இடத்திற்குச் செல்ல பரிந்துரைக்கப்படுகிறார்கள், இதனால் அவர்கள் நுழைவாயிலுக்கு அருகில் பார்க்கிங் இடங்களைப் பெற முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel