UAE: கையுறை, முக கவசம் இல்லை.. சுகாதாரமற்ற உணவு.. அதிரடியாக 29 உணவகங்களை மூடிய எமிரேட்..!!

கடந்த ஆண்டான 2024இல் பொது சுகாதார மற்றும் பாதுகாப்பு தரங்களை மீறியதற்காக, ஃபுஜைராவில் உள்ள 29 உணவு விற்பனை நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டதாக அந்நகர முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. அவற்றில் சில உணவகங்கள் உரிமங்கள் இல்லாமல் செயல்பட்டதாகவும், மற்றவை மோசமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியதாகவும், சில ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை மற்றும் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணியத் தவறிவிட்டதாகவும் ஃபுஜைரா முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
மேலும், நிறுவனங்களின் மூடுதலுக்கு வழிவகுத்த தொடர்ச்சியான மற்றும் கடுமையான மீறல்களையும் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
- சரியான வெப்பநிலையில் உணவை சேமித்து காட்சிப்படுத்தத் தவறுதல்
- நிறுவனங்களுக்குள் அத்தியாவசிய சுகாதார நடவடிக்கைகளை புறக்கணித்தல்
- தரை, கூரைகள் மற்றும் வடிகால் அமைப்புகளின் மோசமான பராமரிப்பு
- சிறந்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி இல்லாதது
- தேவையான உரிமங்கள் இல்லாமல் இயங்குதல்
- முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிவது அல்லது வளாகத்திற்குள் சமூக தூரத்தை கடைபிடிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் தோல்வி
இவ்வாறு பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கடுமையான மீறல்களைச் செய்து, நிதி அபராதங்களை குவித்த பின்னர் இந்த நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. இது குறித்து ஃபுஜைரா முனிசிபாலிட்டியின் இயக்குநர் ஜெனரல் முகமது அல் அப்காம் அவர்கள் செய்தி ஊடகங்களிடம் பேசுகையில், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதும், கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதும் முனிசிபாலிட்டியின் முக்கிய குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.
ஆய்வு பிரச்சாரங்கள்
கடந்த ஆண்டு ஃபுஜைரா முனிசிபாலிட்டியின் சுகாதார கட்டுப்பாட்டுத் துறையால் நடத்தப்பட்ட 31,462 ஆய்வுகளில், 1,525 எச்சரிக்கைகள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறிய வணிகங்களுக்கான பல மூடல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக முனிசபாலிட்டி தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு பிரச்சாரங்கள் ஃபுஜைரா பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் மாதிரியாக இருப்பதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகவும், நகரத்தின் சுத்தமான தொழில்முறையை பராமரிப்பதையும், நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு விநியோகத்தை உறுதி செய்வதையும், உணவைக் கையாள்வதில் எந்தவொரு முறைகேடுகளையும் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததாகவும் அல் அப்காம் கூறியுள்ளார்.
மேலும், அவர் பேசிய போது, ஃபுஜைரா முனிசிபாலிட்டி அங்கீகரிக்கப்படாத பூச்சிக்கொல்லிகளின் இறக்குமதி, விற்பனை அல்லது பயன்பாட்டை கண்டிப்பாக தடைசெய்வதுடன் உரிமம் பெற்ற தொழில் வல்லுநர்கள் மட்டுமே பூச்சி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கையாளுவதை உறுதிசெய்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக நோய்களைப் பரப்பும் கொசுக்கள், ஈக்கள் போன்ற பூச்சிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்ததுடன், கடற்கரைகள், பொது பூங்காக்கள், சந்தைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடியிருப்பு மற்றும் தொழில்துறை மண்டலங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூஜ்ஜிய சகிப்புத்தன்மை
வழக்கமான ஆய்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து இணக்கத்தை அமல்படுத்தும் என்று உறுதியளித்த அல் அப்காம், மேலும் மீறுபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “நகராட்சி அதன் சுகாதார கண்காணிப்பு வழிமுறைகளை தொடர்ந்து மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் உணவு மற்றும் சுகாதார வசதி தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel