இந்திய மக்களுக்கான விசா கொள்கையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ள அமீரக அரசு..!!

ஐக்கிய அரபு அமீரக அரசானது பிப்ரவரி 13, 2025 முதல், இந்திய நாட்டினருக்கான விசா கொள்கையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய மாற்றத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நாடுகளின் விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கான ‘விசா-ஆன்-அரைவல் திட்டத்தை’ விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதிய விசா கொள்கையின் படி, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய ஆறு நாடுகளிலிருந்து செல்லுபடியாகும் விசாக்கள், ரெசிடென்ஸி பெர்மிட் அல்லது கிரீன் கார்டுகள் பெற்று சாதாரண பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் இப்போது அனைத்து ஐக்கிய அரபு அமீரக நுழைவு புள்ளிகளிலும் அரைவல் விசாக்கள் பெறுவதற்கான தகுதியடைவார்கள் என்று கூறப்படுகிறது.
திறமையான தொழில் வல்லுநர்களையும் தொழில்முனைவோரையும் ஈர்ப்பதற்கான அமீரகத்தின் பரந்த முயற்சிகளுடன் ஒத்துப்போகும் இந்த விரிவாக்கம், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வலுவான உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாட்டில் வருகை, வாழ, வேலை மற்றும் முதலீடு செய்வதை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த திட்டம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் UK போன்ற நாடுகளின் ஆவணங்களைக் கொண்டவர்களுக்கு மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP)க்கான கூட்டாட்சி ஆணையம், தற்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அமீரக நுழைவு புள்ளிகளிலும் தகுதியான இந்திய பயணிகளுக்கு விசாக்கள் வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டுகள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதை உறுதிசெய்து, உள்ளூர் விதிமுறைகளின்படி தேவையான விசா கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசா கட்டணம்
ICP இன் படி, மேலே குறிப்பிட்ட நாடுகளில் இருந்து செல்லுபடியாகும் விசாக்கள், ரெசிடென்ஸி அனுமதிகள் அல்லது கிரீன் கார்டுகளைக் கொண்ட பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு 14 நாள் நுழைவு விசாவை பெறுவதற்கான கட்டணம் 100 திர்ஹம்ஸ் ஆகும். விசாவை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க கட்டணம் 250 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.
60 நாள் விசா வழங்குவதற்கான கட்டணம் 250 திர்ஹம் ஆகும். இந்த விரிவாக்கம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே ஆழமாக வேரூன்றிய வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. இது இந்திய குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சுமூகமான பயணத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், வசிப்பதற்கும் அதிக வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் இந்த முயற்சியானது, சுற்றுலா மற்றும் முதலீட்டிற்கான இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஈர்ப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel