அமீரக செய்திகள்

2024ம் ஆண்டில் அபராதத்தின் மூலம் 2.3 பில்லியன் திர்ஹம்ஸ் வருவாய் ஈட்டிய சாலிக் நிறுவனம்..!!

துபாயின் மிகப்பெரிய டோல் கேட் ஆபரேட்டரான சாலிக் நிறுவனம், கடந்த 2024 ஆம் ஆண்டில் சுமார் 2.3 பில்லியன் திர்ஹம்ஸ் வருவாய் ஈட்டியதாக அறிவித்துள்ளது, இது முந்தைய ஆண்டிற்கான 2.1 பில்லியன் திர்ஹம்ஸ் வருவாயை விட 8.7% அதிகரிப்பைக் குறிக்கிறது, இந்த வளர்ச்சிக்கு அதிகரித்த அபராதங்கள் மற்றும் அதிகரித்த டோல் பயன்பாடு முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், சாலிக் நிறுவனத்தின் லாபம் 6.7% உயர்ந்து 1.279 பில்லியன் திர்ஹம்ஸை எட்டியதாகவும், அபராதங்களிலிருந்து ஈட்டிய வருவாய் 9.3% அதிகரித்து 236.9 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் 62.1 மில்லியன் திர்ஹம்ஸ் வருவாய் ஈட்டி 14.5% குறிப்பிடத்தக்க உயர்வை சாலிக் பதிவு செய்துள்ளது.

ஏனெனில், 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், மொத்த விதி மீறல்களின் எண்ணிக்கை 5.4% அதிகரித்து மொத்தமாக 730,000 எனும் இமாலய இலக்கை எட்டியுள்ளது. இதன் விளைவாக, அபராதங்களிலிருந்து பெற்ற வருவாய் ஆண்டுக்கான மொத்த வருவாயில் 10.3 சதவீதம் பங்களித்ததாக கூறப்படுகின்றது.

அதேசமயம், 2023 இல் 1.84 பில்லியன் திர்ஹம்ஸ் ஆக இருந்த டோல்கேட் வருவாய், 2024 இல் 8% அதிகரித்து, 1.99 பில்லியன் திர்ஹம்ஸ் ஆகவும் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் துபாயில் பிசினஸ் பே மற்றும் அல் சஃபா சவுத் ஆகிய இரண்டு புதிய சுங்கச்சாவடிகள் நவம்பர் 24, 2024 அன்று செயல்பாட்டுக்கு வந்ததும், இதனால் துபாயில் மொத்த சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

2025 இல் கூடுதல் வருவாய்

2024இன் வலுவான வருவாய் முடிவுகளைத் தொடர்ந்து, சாலிக் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முன்னறிவிப்பை அதிகரித்துள்ளது. அதாவது, நடப்பு ஆண்டில் 28-29% வருவாய் வளர்ச்சியை கணித்துள்ளது. அதாவது மாறுபட்ட சுங்கக் கட்டணக் கொள்கை, இரண்டு புதிய டோல் கேட் மற்றும் எமார் மால்ஸுடனான பார்க்கிங் கூட்டாண்மை வருவாயை மேலும் உயர்த்தும் என சாலிக்கின் தலைமை நிர்வாக அதிகாரி இப்ராஹிம் சுல்தான் அல் ஹடாட் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!