ஷார்ஜா-துபாய் இடையே போக்குவரத்தை எளிதாக்கும் புதிய பாலம்: பெட்ரோல், சாலிக் கட்டணம் மிச்சப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

துபாயில் அல் ஷிந்தகா பகுதியில் புதிய பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷார்ஜாவிலிருந்து துபாய்க்கு பயணிக்கும் ஓட்டுநர்கள் இறுதியாக மென்மையான போக்குவரத்தை அனுபவிக்கிறார்கள். அதாவது தூரம் அப்படியே இருந்தாலும், புதிதாகத் திறக்கப்பட்ட பாலம், கடுமையான நெரிசலைத் தவிர்க்க உதவுகிறது என்றும், குறிப்பாக காலை நெரிசல் நேரத்தில் சுமூகமாக பயணிக்க முடிவதாகவும் வாகன ஓட்டிகள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
ஷேக் சையத் சாலையை நோக்கி இன்ஃபினிட்டி பாலத்தை அடுத்து அமைந்துள்ள இந்தப் பாலம், அல் கலீஜ் ஸ்ட்ரீட்டை காலித் பின் அல் வலீத் சாலையுடன் இணைக்கிறது, இது துபாய் ஃபிரேம், அல் கைல் சாலை மற்றும் ஷேக் சையத் சாலை போன்ற முக்கிய பகுதிகளை அடைவதற்கான சிறந்த விருப்பங்களில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிம்மதிப் பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்
ஷார்ஜாவில் உள்ள அல் நஹ்தாவிலிருந்து துபாயில் உள்ள அல் பர்ஷாவுக்கு பயணிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், இந்த பாதை போக்குவரத்து நெரிசலைக் குறைத்துள்ளதாகவும், எரிபொருளைச் சேமிக்கவும், சாலிக் கேட்களில் தினமும் 18–20 திர்ஹம் பணத்தை மிச்சப்படுத்த உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் இத்திஹாத் சாலை, ஏர்போர்ட் டன்னல் சாலை மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலை போன்ற நெரிசலான சாலைகளைத் தவிர்த்து, கார்னிச் ஸ்ட்ரீட், இன்ஃபினிட்டி பிரிட்ஜ், அதன் பின் அல் கைல் சாலைக்கு புதிய பாலத்தைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
என்னதான் காலை வாகனம் ஓட்டம் மேம்பட்டிருந்தாலும், மாலை நேரப் பயணம் இன்னும் நெரிசலை எதிர்கொள்வதாகவும், குறிப்பாக வாட்டர்ஃபிரண்ட் மார்க்கெட் மற்றும் அல் இத்திஹாத் சாலை எக்ஸிட் இடத்தைச் சுற்றி வாகனங்கள் குவிந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாலையில் வரும் போது இன்ஃபினிட்டி பாலத்தில் போக்குவரத்து அதிகமாகிறது என்று கூறிய மற்றொரு குடியிருப்பாளர் “காலையில் பாதை குறுகலாகத் தொடங்கி விரிவடைகிறது, இது நெரிசலை குறைக்க உதவுகிறது. ஆனால் மாலையில், அது எதிர்மாறாக இருக்கிறது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நியூ கோல்ட் சூக் எக்ஸ்டென்ஷன் பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள், புதிய பாலம் அவர்களின் பயணத்தை வெகுவாக மேம்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஷேக் சையத் சாலையில் பணிபுரியும் ஒருவர், சாலிக்குடன் தனது பயண நேரம் 40 நிமிடங்களிலிருந்து 15 நிமிடங்களாகக் குறைந்ததாகக் கூறியுள்ளார். சாலிக் இல்லாவிட்டாலும், அவர் சுமார் 20 நிமிடங்களில் இடத்தை அடைந்து விடுவதாக தெரிவித்துள்ளார். இன்ஃபினிட்டி பிரிட்ஜில் நேரடியாக பார்க்கிங் இடத்திற்குச் செல்லும் ஒரு எக்ஸிட் வசதியின் காரணமாக அவர் மாலை நேர நெரிசலையும் தவிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பெருவாரியான வாகன ஓட்டிகள் நேர்மறையான தாக்கம் உணரப்பட்டதாகக் கருத்து தெரிவிக்கும் நிலையில், துபாய் மற்றும் ஷார்ஜாவை இணைக்கும் முக்கிய சாலைகளில் அழுத்தத்தைக் குறைக்க இதேபோன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்ந்து உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel