அமீரக செய்திகள்

அமீரகத்தில் கொளுத்தும் வெயில்..!! வரும் நாட்களில் வெப்பநிலை தொடர்ந்து உயரும் என தகவல்..!!!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து கடுமையாக அதிகரித்து வருவதால், தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெப்பநிலை குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சமீபத்திய வானிலை அறிவிப்பில், வெப்பமான சூழ்நிலையில் பாதுகாப்பாக இருக்க குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு NCM வலியுறுத்தியுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக நேற்று (திங்கள்) அபுதாபியின் அல் ஷவாமேக்கில் (Al Shawamekh) மதியம் 1:15 மணிக்கும், ஃபுஜைராவின் தவியெனில் மதியம் 2:00 மணிக்கும் 45.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NCM வெளியிட்ட அறிக்கையின் படி, பொதுவாக நாட்டின் உள் பகுதிகள், குறிப்பாக அல் அய்னின் சில பகுதிகள் அதிகபட்ச வெப்பநிலையை அனுபவிக்கின்றன, அங்கு இந்த மாதம் வெப்பநிலை 38°C முதல் 45°C வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் ஈரப்பதமும் அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் பனிமூட்டமான காலை நேரத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NCM  வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, செவ்வாய் முதல் வெள்ளி வரை, பெரும்பாலான பகுதிகளில் 40 முதல் 45°C வரை என  வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, குடியிருப்பாளர்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், மதிய வேளையில் வெளிப்புற செயல்பாடுகளைத் தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணியவும் NCM அறிவுறுத்துகிறது.

இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 29) வானிலை பெரும்பாலும் வெயிலுடன் இருக்கும். மேலும், பல பகுதிகளில் வெப்பநிலை 44°C க்கு மேல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தென்கிழக்கு மற்றும் வடகிழக்கில் இருந்து வரும் காற்று மணிக்கு 10 முதல் 25 கிமீ வரையிலும், சில நேரங்களில் மணிக்கு 35 கிமீ வரையிலும் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!