அமீரக செய்திகள்

துபாய்: 67 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 3,800க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்..

துபாய் மெரினாவில் உள்ள 67 மாடிகளைக் கொண்ட மெரினா பின்னாக்கிள் (Marina Pinnacle) கட்டிடத்தின் மேல் தளங்களில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தை தொடர்ந்து அந்த கட்டிடத்தில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இது குறித்து தெரிவிக்கையில் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்குப் பிறகு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகவும், கட்டிடத்தின் மேல் தளங்களில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த கட்டிடத்தின் 49வது மாடியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில் “புகை வாசனையால் நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன், என் வீட்டில் உள்ளவர்கள் என்னை அழைப்பதைக் கேட்டேன். உடனே நாங்கள் கட்டிடத்திற்கு கீழே விரைந்தோம்” என்று கூறியுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் உட்பட அவசரகால குழுவினர் விரைவாக அந்தப்பகுதிக்கு சென்றுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடியதாக மற்றொரு குடியிருப்பாளர் கூறியுள்ளார்.

நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் செய்தி ஊடகங்களால் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் இரவு 11 மணியளவில் அருகிலுள்ள தளங்களுக்கு தீ பரவுவதைக் காட்டுகிறது. இதையடுத்து, அதிகாலை 1.44 மணியளவில், துபாய் ஊடக அலுவலகம் (DMO) அனைத்து குடியிருப்பாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை X தளத்தில் உறுதிப்படுத்தியது. அதில் “சிறப்பு குழுக்கள் 67 மாடி கட்டிடத்தில் இருந்து அனைத்து குடியிருப்பாளர்களையும் வெற்றிகரமாக வெளியேற்றின, இந்த நடவடிக்கை முழுவதும் அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து எடுக்கப்பட்டது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அதிகாலை 2.21 மணியளவில், 764 குடியிருப்புகளைச் சேர்ந்த 3,820 குடியிருப்பாளர்கள் காயங்கள் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக DMO அறிவித்தது. பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவை வழங்க ஆம்புலன்ஸ் குழுக்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில குடியிருப்பாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் கட்டிடத்திற்கு வெளியே காத்திருந்த நிலையில், மற்றவர்கள் மெரினா டவர்ஸ் டிராம் நிலையம் போன்ற அருகிலுள்ள இடங்களில் தங்குமிடம் தேடியதாகக் கூறப்படுகின்றது.

 

மெரினா பினாக்கிளில் இது முதல் சம்பவம் அல்ல. கடந்த மே 2015 இல், சமையலறை விபத்து காரணமாக 47 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது, அது கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு முன்பு 48 வது மாடிக்கு பரவியது. அத்துடன் இந்த கட்டிடம் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரிய தீ விபத்துகளைச் சந்தித்த மற்றொரு வானளாவிய கட்டிடமான தி டார்ச்சிற்கு அருகில் உள்ளது.

வெள்ளிக்கிழமை முன்னதாக, அருகிலுள்ள சுலாஃபா டவரில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் தனி தீ விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இரண்டு சம்பவங்களிலும் எந்தவொரு காயமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை, மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!