ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) சில பகுதிகளில் இன்று (புதன்) காலை முதல் பலத்த புழுதிப் புயல் வீசியது. இதனால் பல எமிரேட்டுகளில் (emirates) பார்வைத்திறன் வெகுவாகக் குறைந்ததையடுத்து, அதிகாரிகள் அங்கு வசிப்பவர்களை குறிப்பாக புழுதி ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 11 மணியளவில் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய பகுதிகளில் வீசிய புழுதியால், கிடைமட்டப் பார்வைத்திறன் 1,000 மீட்டருக்கும் குறைவாகக் குறைந்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும், புழுதிக்கான வானிலை எச்சரிக்கை இரவு 7 மணி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை நேரத்தைத் தொடர்ந்து, நாளின் பிற்பகுதியில் பலத்த காற்று வீசும் என்றும், கடல் சீற்றத்துடன் இருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், கடற்கரைக்குச் செல்பவர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாக தெளிவான, ஆனால் புழுதி நிறைந்த வானிலையே தொடர்ந்து நிலவும் என்றும், மணிக்கு 40 கி.மீ. வேகம் வரை வீசக்கூடிய பலத்த காற்றானது, பல பகுதிகளில் மணலையும் புழுதியையும் கிளப்பிவிடும் என்றும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வெப்பநிலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் வெப்பநிலை 43°C முதல் 45°C வரையிலும், மலைப்பாங்கான பகுதிகளில் 29°C முதல் 34°C வரையிலும் பதிவாகக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரேபிய வளைகுடாவில் பிற்பகலுக்குப் பிறகு கடல் சீற்றமாக மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஓமன் கடலில் காலை வேளையில் லேசானது முதல் மிதமானது வரையிலான அலைகள் காணப்பட்டாலும், நாளின் பிற்பகுதியில் அதுவும் சீற்றமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய புழுதி நிறைந்த வானிலையும், வெப்பநிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும் வார இறுதி வரை தொடரக்கூடும் என்றும், வியாழக்கிழமையன்று வெப்பநிலையில் லேசான சரிவு காணப்பட்டாலும், வெள்ளிக்கிழமையன்று மீண்டும் வெப்பத்தின் அளவு உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel