ADVERTISEMENT

ஷேக் ஹம்தானுக்கு நன்றி தெரிவித்த கென்யாவைச் சேர்ந்த சிறுவன்.. நிறைவேறியது துபாயைச் சுற்றிப் பார்க்கும் ஆசை..

Published: 23 May 2026, 10:39 AM |
Updated: 23 May 2026, 10:42 AM |
Posted By: Menaka

சமீபத்தில் கென்யாவை சேர்ந்த சிறுவன் தன் தாயிடம் துபாய்க்கு செல்ல வேண்டும் என்று தனது ஆசையை உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது இறுதியில் துபாய் பட்டத்து இளவரசர் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமிற்கும் எட்டி அந்த வீடியோவிற்கு பதிலளித்திருந்தார். இந்த நிலையில் தற்பொழுது இளவரசர், மிலான் என்ற அந்த சிறுவனை துபாய்க்கு வரவேற்று புதிதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

கென்யாவிலிருந்து தனது குடும்பத்தினருடன் வந்த அந்தச் சிறுவன், புர்ஜ் கலிஃபா, கிரீன் பிளானட், ஸ்கை துபாய் மற்றும் IMG வேர்ல்ட்ஸ் ஆஃப் அட்வென்ச்சர், அக்வாவென்ச்சர் வேர்ல்ட் மற்றும் துபாய் மிராக்கிள் கார்டன் உள்ளிட்ட துபாயின் மிகவும் பிரபலமான சில இடங்களைச் சுற்றிப் பார்த்துள்ளார்.

மிலான் தனது கனவுப் பயணம் நிறைவேறியதைத் தொடர்ந்து, துபாய்க்கும் ஷேக் ஹம்தானுக்கும் நன்றி தெரிவித்து இணையத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

ADVERTISEMENT

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், மிலானின் உணர்ச்சிப்பூர்வமான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்த வீடியோவில், அந்தச் சிறுவன் கண்ணீருடன் தனது தாயிடம், “நான் இப்போதே துபாய்க்குச் செல்ல வேண்டும்” என்று கூறுவதைக் காணலாம்.

அந்தச் சிறுவனின் தாயான மரியா நியாம்பேன், ஒருநாள் இந்தப் பயணத்தை சாத்தியமாக்க கடுமையாக உழைப்பதாக சிறுவனைத் தேற்றி உறுதியளித்தார்.

ADVERTISEMENT

இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் இறுதியில் ஷேக் ஹம்தானைச் சென்றடைந்தது. அவர் அந்த வீடியோவை மீண்டும் பதிவிட்டு, “உங்களை துபாயில் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும், விரைவில் உங்களைச் சந்திப்பேன் என நம்புகிறேன்” என்று பதிலளித்தார்.

இதையடுத்து மே 22 அன்று, துபாய் பட்டத்து இளவரசர், கென்யாவைச் சேர்ந்த சிறுவர்களான மிலன் மற்றும் கிறிஸ்டோபரை அமீரகத்தில் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதைக் கண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மற்றொரு பதிவைப் பகிர்ந்தார்.

மேலும், அவர்கள் துபாயில் தங்கியிருந்த காலத்தில், அந்தக் குடும்பம் தி கிரீன் பிளானட்டில் பட்டாம்பூச்சிகளைப் பிடித்தது, ஸ்கை துபாயில் பென்குயின்களைச் சந்திப்பது, அக்வாவென்ச்சர் வேர்ல்டில் டால்பின்களைப் பார்த்தது என பல மறக்க முடியாத அனுபவங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியான உரையாடல்களும், சுற்றிப் பார்க்கும் தருணங்களும் சமூக ஊடகப் பயனர்களிடையே வைரலாகின. பலர் துபாயின் விருந்தோம்பலையும், அந்த இளம் விருந்தினருக்கு ஷேக் ஹம்தான் காட்டிய அன்பையும் பாராட்டினர். அந்த சிறுவனின் ஆசை தற்பொழுது நிறைவேறியுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel