ADVERTISEMENT

அமீரகத்தில் மே 17 பார்க்கப்படவிருக்கும் துல் ஹஜ் மாத பிறை.. ஃபத்வா கவுன்சில் அறிவிப்பு..!!

Published: 13 May 2026, 11:34 AM |
Updated: 13 May 2026, 11:35 AM |
Posted By: Menaka

இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாத தொடக்கத்தைத் தீர்மானிக்கவும், ஈத் அல் அதா (பக்ரீத்) மற்றும் அரஃபா தினத்திற்கான தேதிகளை உறுதிப்படுத்தவும், துல் ஹஜ் மாதத்தின் பிறையைப் பார்க்கும் பணியானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை, மே 17, 2026 அன்று நடைபெறும் என்று அமீரக ஃபத்வா கவுன்சில் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள வான் ஆய்வகங்கள் மற்றும் வானியல் மையங்களுடன் ஒருங்கிணைந்து, நவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு முறைகளைப் பயன்படுத்தி இந்தப் பிறை தேடும் செயல்முறை மேற்கொள்ளப்படும் என்று கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பின் படி, சர்வதேச வானியல் மையத்துடன் இணைந்து ‘கத்ம்’ (Khatm) பகுதியில் பிறை தேடுதல், துபாய் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையுடன் இணைந்து துபாயில் பிறை தேடுதல், மற்றும் ஷார்ஜா விண்வெளி மற்றும் வானியல் மையத்துடன் இணைந்து ஷார்ஜாவில் பிறை தேடுதல் எனப் பல இடங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை பிறை தென்பட்டால், துல் ஹஜ் மாதம் திங்கட்கிழமை, மே 18 அன்று தொடங்கும் என்றும், அவ்வாறு பிறை தென்படவில்லை என்றால், துல் காயிதா மாதம் 30 நாட்களை நிறைவு செய்து, துல் ஹஜ் மாதம் செவ்வாய்க்கிழமை, மே 19 அன்று தொடங்கும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

ஹஜ் புனித யாத்திரை மற்றும் ஈத் அல் அதா கொண்டாட்டங்கள் உள்ளிட்ட முக்கிய இஸ்லாமிய நிகழ்வுகளின் தேதிகளைத் தீர்மானிப்பதால், துல் ஹஜ் மாதத்தின் தொடக்கம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

ஷார்ஜா வானியல், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமியின் வானியல் கணிப்புகளின்படி, ஈத் அல் அதா புதன்கிழமை, மே 27 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதற்கான இறுதி தேதி பிறை தென்படுவதை பொறுத்தே உறுதி செய்யப்படும்.

முன்னதாக, அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளிகளுக்கான ஈத் விடுமுறை அட்டவணையை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அந்த அறிவிப்பின் படி, பொதுத்துறை ஊழியர்களுக்கு மே 25 முதல் மே 29 வரை ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும். வார இறுதி நாட்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, ​​பல குடியிருப்பாளர்களுக்கு இது ஒன்பது நாட்கள் கொண்ட நீண்ட விடுமுறையாக அமையக்கூடும்.

அதேவேளை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கான பருவ இடைவேளை மற்றும் ஈத் விடுமுறை ஆகியவை மே 25 முதல் 29 வரை நீடிக்கும் என்பதை ஐக்கிய அரபு அமீரகக் கல்வி அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஷார்ஜா அமீரகத்தில் நடைமுறையில் உள்ள மூன்று நாள் வார இறுதி விடுமுறை முறையுடன் ஈத் விடுமுறையும் இணைவதால், ஷார்ஜாவில் பணிபுரியும் ஊழியர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் 10 நாட்கள் வரை விடுமுறையை அனுபவிப்பார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel