எதிஹாட் ரயில் (Etihad Rail) திட்டத்தின் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, எமிரேட்ஸ் சாலையில் உள்ள ஒரு முக்கிய வெளியேறும் பாதை (exit) தொடர்ந்து 10 நாட்களுக்கு இரவு நேரங்களில் மூடப்படவுள்ளதால், துபாயிலிருந்து ஷார்ஜா செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பாக ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA_SHJ) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, துபாயிலிருந்து ஷார்ஜா செல்லும் ஒற்றை வழிப்பாதை (single-lane exit), ஜூன் 13 முதல் ஜூன் 22, 2026 வரை தினமும் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தச் சாலை மூடல், ஷார்ஜா மசூதி மற்றும் மலிஹா ஸ்ட்ரீட் இன்டெர்சேஞ்சிற்கு (Maliha Street interchange) அருகிலுள்ள எமிரேட்ஸ் சாலையின் ஒரு பகுதியை பாதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் எதிஹாட் ரயில் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், இந்தப் பணிக் காலத்தில் ஒவ்வொரு இரவும் ஐந்து மணி நேரத்திற்கு இந்தச் சாலை அடைப்பு அமலில் இருக்கும் என்றும், அப்பகுதியில் உள்ள தற்காலிக மாற்றுப் பாதைகள் மற்றும் போக்குவரத்து குறியீடுகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, அதிகாலை வேளைகளில் துபாய் மற்றும் ஷார்ஜா இடையே பயணிக்கும் ஓட்டுநர்கள், தாமதத்தைத் தவிர்க்க கூடுதல் பயண நேரத்தை ஒதுக்குமாறும் மாற்றுப் பாதைகளைப் பரிசீலிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எதிஹாட் ரயில் திட்டம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ரயில் வலையமைப்பை விரிவுபடுத்தி மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்தத் தற்காலிக சாலை மூடல் மேற்கொள்ளப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel