ADVERTISEMENT

90% வரை தள்ளுபடி, கார்கள், தங்கம் பரிசுகள்: விரைவில் துவங்கும் துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் 2026

Published: 26 Jun 2026, 9:23 AM |
Updated: 26 Jun 2026, 10:17 AM |
Posted By: Menaka

துபாய் தனது மிகப்பெரிய கோடைக்கால கொண்டாட்டங்களில் ஒன்றிற்குத் தயாராகி வருகிறது. ஆம், துபாய்வாசிகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) 2026, ஜூலை 2 முதல் ஆகஸ்ட் 30 வரை மீண்டும் வருகிறது. இது நகரம் முழுவதும் 60 நாட்களுக்கு ஷாப்பிங், பொழுதுபோக்கு, உணவுச் சலுகைகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்ற அனுபவங்களை வழங்குகிறது.

ADVERTISEMENT

துபாய் ஃபெஸ்டிவல்ஸ் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனத்தால் (DFRE) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடாந்திர விழாவின் 29வது பதிப்பு, “Make it a summer” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக முக்கிய சில்லறை வர்த்தக விளம்பரங்கள், நேரடி நிகழ்ச்சிகள், பரிசுப் பிரச்சாரங்கள் மற்றும் ஸ்டேகேஷன் சலுகைகளை ஒன்றிணைக்கிறது.

துபாயின் மால்கள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளில் நடைபெறும் தொடர்ச்சியான நேரடி நிகழ்ச்சிகளுடன், இந்த விழா ஜூலை 2 முதல் 5 வரை தொடங்குகிறது.

ADVERTISEMENT

துபாய் ஹில்ஸ் மாலில் எமிராட்டி பாடகர்களான சைஃப் அல் அலி மற்றும் அர்கம் அல் அப்ரி ஆகியோரின் இலவச இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மிர்டிஃப் சிட்டி சென்டர் பிரபலமான அரபு நட்சத்திரங்களான ரஹ்மா ரியாத் மற்றும் நஸ்ஸிஃப் ஸெய்தூன் ஆகியோரை வரவேற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இசை ஆர்வலர்கள் மால் ஆஃப் தி எமிரேட்ஸில் கலீஜி நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்கலாம், அதே சமயம் குடும்பங்கள் ஸ்பேஸ்டூன் கருப்பொருளைக் கொண்ட அசெம் சுக்கர் இசை நிகழ்ச்சி மூலம் தங்கள் குழந்தைப் பருவ நினைவுகளை மீட்டெடுக்கலாம்.

ADVERTISEMENT

இதற்கிடையில், மோதேஷ் வேர்ல்ட், துபாய் உலக வர்த்தக மையத்தில் ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 23 வரை திறக்கப்படும், இதில் பொழுதுபோக்கு மண்டலங்கள், ஷாப்பிங் பகுதிகள் மற்றும் குடும்ப நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மோதேஷ் கல்வி உதவித்தொகை திட்டத்திலும் பங்கேற்கலாம், இது தலா 20,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 10 கல்வி உதவித்தொகைகளை வழங்கும்.

2026-ஆம் ஆண்டிற்கான புதிய ஈர்ப்புகள்

இந்த ஆண்டு விழா பல புதிய ஈர்ப்புகளை அறிமுகப்படுத்துகிறது. மிகப்பெரிய புதிய அம்சங்களில் ஒன்று DSS லக்ஸ் எடிஷன் ஆகும். இது ஆடம்பர பிராண்டுகள், பிரத்யேக முன்னோட்டங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளைக் கொண்ட ஒரு உயர்தர ஷாப்பிங் அனுபவமாகும்.

அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ‘பள்ளிக்குத் திரும்பும் திருவிழா’வை (Back-to-School Carnival) குடும்பங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில், புதிய DSS கலைநிகழ்ச்சி விழா (DSS Performing Arts Fest), மூன்று வார இறுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வளாகங்களில் அணிவகுப்புகள், சாகசக் கலைகள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் வான்வழி சாகசங்களை வழங்கும்.

மேலும், இவற்றில் முதன்மையான ப்ரோமோஷன் “Win Your Home in Dubai” என்பதாகும். இது, பிங்கட்டி டெவலப்பர்ஸின் 12 குடியிருப்பு யூனிட்களில் ஒன்றை வெல்லும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதில், மாபெரும் பரிசான இரண்டு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றும் அடங்கும்.

மிகப்பெரிய ஷாப்பிங் தள்ளுபடிகள்

DSS-இன் கிரேட் துபாய் சம்மர் சேல் (Grand Dubai Summer Sale) காலத்தில் 90 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஃபெஸ்டிவல் காலம் முழுவதும் ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், நகைகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றில் சிறப்பு ப்ரோமோஷன்கள் இடம்பெறும்.

குறிப்பாக, ஆகஸ்ட் 3 முதல் 30 வரை நடைபெறும் ‘பள்ளிக்குத் திரும்பும்’ (Back-to-School) ஷாப்பிங் பருவத்தில், பள்ளி உபகரணங்கள், கேட்ஜெட்கள் மற்றும் குடும்ப அத்தியாவசியப் பொருட்கள் மீதும் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் ஷாப்பிங் விழாக் காலம் முழுவதும், மதிப்புமிக்க பரிசுகளை வெல்ல வாடிக்கையாளர்களுக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கும்.

DSS டெய்லி சர்ப்ரைசஸ் (DSS Daily Surprises) பிரச்சாரம் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் பிரத்யேகமான ஒரு நாள் சலுகைகளை வெளிப்படுத்தும். அதே நேரத்தில், லக்கி ரசீது (Lucky Receipt) ப்ரோமோஷன் மூலம், 300 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பரிசுகள் கிடைக்கும்.

அதேபோல், DSS மெகா ராஃபிள்ஸ், 2026 டோங்ஃபெங் 007 வாகனத்தை வெல்வதற்கும், 500,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள ரொக்கப் பரிசுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன.

மேலும், நகைகள் வாங்குபவர்கள் ‘சிட்டி ஆஃப் கோல்ட்’ ப்ரோமோஷன் நிகழ்வில் பங்கேற்று, மூன்று கிலோகிராம் வரை தங்கம் வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். அதே நேரத்தில், DSS டிஜிட்டல் ராஃபிள் ஒன்பது தனித்தனி டிரா மூலம் பல எக்ஸீட் வாகனங்களைப் (Exeed cars) பரிசாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உணவுப்பிரியர்களை கவரும் வகையில், கோடைக்கால உணவக வாரம் (Summer Restaurant Week) ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும். இதில், பங்கேற்கும் உணவகங்களில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உணவுப் பட்டியல்களை வாடிக்கையாளர்கள் உண்டு மகிழலாம்.

அத்துடன் ஆகஸ்ட் 3 முதல் 30 வரை, பிரபலமான ’10 திர்ஹாம் டிஷ்’ ப்ரோமோஷன் நிகழ்வு மீண்டும் வருகிறது. இதில், பங்கேற்கும் உணவகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு உணவுகள் வெறும் 10 திர்ஹம்ஸ்க்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர, துபாய் முழுவதும் மெழுகுவர்த்தி இசை நிகழ்ச்சிகள், கலாச்சார அணிவகுப்புகள், குடும்ப நிகழ்ச்சிகள் ஆகியவை கூடுதல் ஈர்ப்புகளாகும்.

மேற்கூறிய பெரும் தள்ளுபடிகள், முக்கிய பரிசுகள், நேரடி பொழுதுபோக்கு மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட இடங்கள் ஆகியவற்றுடன், துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் 2026 மீண்டும் நகரத்தை பிராந்தியத்தின் மிகவும் உற்சாகமான கோடைகால இடமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel