ADVERTISEMENT

முதல் நாளிலேயே 1,000+ டிக்கெட்டுகள் விற்பனை: எதிஹாட் பயணிகள் ரயிலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

Published: 25 Jun 2026, 7:30 PM |
Updated: 25 Jun 2026, 7:31 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், மக்களிடமிருந்து ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம், இரண்டு எமிரேட்டுகளுக்கு இடையிலான ரயில் சேவைகளுக்கான முன்பதிவை ‘எதிஹாட் ரயில்’ (Etihad Rail) தொடங்கிய முதல் நாளிலேயே 1,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஜூன் 30 அன்று அபுதாபி மற்றும் ஃபுஜைரா இடையே தொடங்கவுள்ள நாட்டின் முதல் எமிரேட்களுக்கு இடையிலான பயணிகள் ரயில் சேவைக்குச் சில நாட்களுக்கு முன்பாகவே இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

புதிய போக்குவரத்து முறைக்கு மக்கள் காட்டும் மிகுந்த ஆர்வத்தை இது பிரதிபலிப்பதாகவும், இதுவே முதல் நாளில் பதிவான மொத்த டிக்கெட் விற்பனை எண்ணிக்கை என்றும் ‘எதிஹாட் ரயில்’ நிறுவனத்தின் வணிகப் பிரிவு நிர்வாக இயக்குனர் அத்ரா அல்மன்சூரி (Adhraa Almansoori) கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அபுதாபி-ஃபுஜைரா வழித்தடமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் பயணிகள் ரயில் வலையமைப்பின் முதல் கட்டமாகும். இது வேகமான, வசதியான மற்றும் நிலையான போக்குவரத்துத் தேர்வை வழங்குவதன் மூலம் எமிரேட்களுக்கு இடையிலான பயண முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளிடையே அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சேவை தொடங்கும் முதல் நாளிலிருந்தே பயண முகவர்கள் ஒரே முன்பதிவின் கீழ் பல டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று ‘எதிஹாட் ரயில்’ உறுதிப்படுத்தியுள்ளது. வணிக நிறுவனங்கள், பள்ளிகள், சுற்றுலா நடத்துநர்கள் மற்றும் பெரிய குழுக்களுக்கான முன்பதிவுகளை ஒருங்கிணைக்க ஒரு பிரத்யேகக் குழுவையும் அமைத்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கை நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட கல்விச் சுற்றுலாக்கள், சுற்றுலாத் தொகுப்புகள் மற்றும் நிறுவன ரீதியிலான பயணங்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய் மற்றும் ஷார்ஜா வழித்தடங்களுக்கான கட்டணங்களில் எதிர்காலத்தில் புதிய சலுகைகள் அல்லது மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்றும் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. அபுதாபி-ஃபுஜைரா சேவையில் குழந்தைகள், கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்கனவே உள்ள தள்ளுபடிகளுடன் கூடுதலாக, அடிக்கடி பயணம் செய்பவர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்புத் தொகுப்புகளும் இந்தத் திட்டங்களில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

தற்போதைக்கு, பயணிகள் இந்தத் தொடக்க வழித்தடத்தில் 55 திர்ஹம்ஸ் முதல் தொடங்கும் அறிமுகக் கட்டணங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், விரிவான கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்தச் சலுகைக் கட்டணங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலைவன நிலப்பரப்புகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு புவியியல் சவால்களைக் கொண்டிருப்பதாலேயே, அபுதாபி-ஃபுஜைரா வழித்தடம் முதல் பயணிகள் வழித்தடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அல்மன்சூரி விளக்கினார். இந்த வழித்தடத்தில் சேவையை இயக்குவது, மற்ற அமீரகங்களுக்குப் பயணிகள் சேவையை விரிவுபடுத்துவதற்கு முன், பயணத்தின் தொடக்க மற்றும் இறுதிப் புள்ளிகளுக்கான இணைப்புத் தீர்வுகளைச் (first-mile and last-mile connectivity) சோதித்து மேம்படுத்தவும் ‘எதிஹாட் ரயில்’ நிறுவனத்திற்கு உதவும் என்று அந்த அதிகாரி எடுத்துரைத்துள்ளார்.

தொடக்கத்தில் உள்ள இந்த இரண்டு வழித்தடங்களும் வெவ்வேறு வகையான பயணிகளுக்குப் பயன்படும் என்று ரயில்வே நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஃபுஜைரா (Fujairah) சேவை சுற்றுலாப் பயணிகள், குடும்பங்கள் மற்றும் ஓய்வுநேரப் பயணிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், துபாய்க்கான திட்டமிடப்பட்ட வழித்தடமானது முக்கியமாகத் தினசரிப் பயணிகள் மற்றும் வணிக ரீதியாகப் பயணம் செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் சேவை தொடங்குவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வரும் வேளையில், முதல் நாளிலேயே அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. எமிரேட்களுக்கு இடையே முதன்முறையாக ரயில் பயணத்தை மேற்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதை இது உணர்த்துவதுடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக முக்கியமான போக்குவரத்துத் திட்டங்களில் ஒன்றிற்கு இது ஒரு சிறப்பான தொடக்கமாகவும் அமைந்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel