ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் கலிஃபா சிட்டியில் (Khalifa City) உள்ள E20 நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டத்தை நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) அறிவித்துள்ளது. இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து ஓட்டத்தைச் சீராக்கவும் மற்றும் சையத் சர்வதேச விமான நிலையத்துடனான (Zayed International Airport) இணைப்பை வலுப்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள வழித்தடங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக அதிகரிக்கப்படும் என்று நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்தவும் நெரிசலைக் குறைக்கவும் 10.5 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய இணைப்புச் சாலைகள் (ramps and loops) மற்றும் நான்கு புதிய பாலங்கள் கட்டப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமின்றி, போக்குவரத்து அணுகல் மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், கலிஃபா சிட்டி மற்றும் சையத் சர்வதேச விமான நிலையப் பகுதிகளில் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள உட்புறச் சாலைகளை அமைத்தல் மற்றும் எட்டு சிக்னல் கொண்ட சந்திப்புகளை நிறுவுதல் ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கும்.
உள்கட்டமைப்பு மேம்பாடுகள்
சாலை விரிவாக்கத்துடன் கூடுதலாக, இத்திட்டத்தில் முக்கிய பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் நிலப்பரப்பு மேம்பாட்டுப் பணிகள் (landscaping) ஆகியவை அடங்கும்:
- 62 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால் கட்டமைப்பு
- 37 கி.மீ நீளமுள்ள நீர்ப்பாசனக் கட்டமைப்பு
- 485 நவீன தெருவிளக்குகள் அமைத்தல்
- உள்ளூர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பசுமைப் பகுதிகளை அதிகரிக்கவும் விரிவான நிலப்பரப்பு மேம்பாடு மற்றும் மரங்களை இடமாற்றம் செய்யும் பணிகள்
போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல் மற்றும் எமிரேட்டின் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வசதிகளை அமைத்தல் ஆகிய அபுதாபியின் தொடர்ச்சியான உத்தியின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைந்துள்ளது என்று DMT தெரிவித்துள்ளது.
இப்பணிகள் நிறைவடைந்ததும், போக்குவரத்து நெரிசல் குறையும், சாலைப் பாதுகாப்பு மேம்படும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். மேலும் கலிஃபா சிட்டி வழியாகவும், சையத் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து திரும்பும் வாகன ஓட்டிகளுக்குப் பயணங்கள் மிகவும் சுமூகமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel