ADVERTISEMENT

துபாயில் தொழிலாளர்களுக்கு இலவச ஐஸ்கிரீம்: தன்னார்வலர்களாக இணைய குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு

Published: 17 Jul 2026, 6:03 PM |
Updated: 17 Jul 2026, 6:03 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கோடைக்கால வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், துபாயைச் சேர்ந்த தன்னார்வக் குழு ஒன்று அந்த எமிரேட் முழுவதும் உள்ள 19,000-க்கும் மேற்பட்ட களப்பணித் தொழிலாளர்களுக்கு (blue-collar workers) பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக ஐஸ்கிரீம் வழங்கும் திட்டத்தை இரண்டாவது கோடைக்காலமாக மீண்டும் தொடங்கியுள்ளது. எனவே, கோடைக்காலத் திட்டத்தில் பங்கேற்குமாறு அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

‘Beat the Heat with the Cool Treat’ என்று பெயரிடப்பட்ட இந்த முன்னெடுப்பை, சமூக மேம்பாட்டு ஆணையத்தில் (CDA) பதிவு செய்யப்பட்ட தன்னார்வக் குழுவான ‘Spread Kindness Volunteering Team’ ஏற்பாடு செய்துள்ளது.

துபாய் முழுவதும் கடுமையான கோடை வெயிலில் வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆறுதலையும் பாராட்டுதலையும் அளிக்கும் நோக்கிலேயே இத்திட்டம் தொடங்கப்பட்டதாக அக்குழுவின் நிறுவனர் ஆயிஷா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் பேசுகையில், “வெளியில் எங்கள் தொழிலாளர் சகோதரர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டோம்; அவர்களுக்கு உடனடி நிம்மதியையும் புன்னகையையும் தரக்கூடிய ஒரு எளிய செயலைச் செய்ய விரும்பினோம்,” என்று தெரிவித்துள்ளார்.

துபாயில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று ‘Open Arms’ என்ற பெயரில் சிறிய அளவிலான நற்பணிகளைச் செய்யத் தொடங்கியபோது, ​​2015-ல் இந்த முன்னெடுப்பு உருவானது. இந்த ஆண்டு, தங்கள் சமூக நலத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக CDA-வில் பதிவு செய்த பிறகு, இக்குழு ‘Spread Kindness’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஆயிஷா வெளியிட்டுள்ள தகவலின் படி, ஒவ்வொரு விநியோக நிகழ்வின்போதும், ஐஸ்கிரீம் வேனுடன் பணித்தளங்களுக்குச் செல்வதற்கு முன், தன்னார்வலர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் உடல் நீரேற்றம் (hydration) குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. தொழிலாளர்களின் இடைவேளை நேரத்தில் அவர்களுக்கு ஐஸ்கிரீம் வழங்க, அக்குழு பணித்தள மேற்பார்வையாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

நகரத்தை உருவாக்குவதில் தொழிலாளர்கள் ஆற்றிவரும் பங்களிப்பிற்காகத் தன்னார்வலர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், கோடையின் வெப்பத்திலும் இந்த எளிய செயல் பலரது முகங்களில் புன்னகையை வரவழைக்கிறது என்றும் ஆயிஷா குறிப்பிட்டுள்ளார்.

தன்னார்வலராக இணைவது எப்படி?

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் குடியிருப்பாளர்கள், CDA Volunteer Portal அல்லது DubaiNow செயலி (app) ஆகியவற்றில் ‘Spread Kindness’ என்று தேடிப் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வப் பணிகள் மேற்கொள்ளும் நேரம் CDA-வால் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படுகிறது, மேலும் பங்கேற்பாளர்களுக்குத் தன்னார்வச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

“இரண்டு மணி நேரமோ அல்லது நாள் முழுவதுமோ – எதுவாக இருந்தாலும் சரி, வாருங்கள்; நம் நகரத்தை உருவாக்கும் மக்களுக்கு நன்றி கூறி அவர்கள் முகத்தில் புன்னகையை வரவழையுங்கள்,” என்று ஆயிஷா இஸ்மாயில் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க விரும்பும் குடியிருப்பாளர்கள், ‘AES Community Care Club’ உடனான இக்குழுவின் கூட்டு முயற்சியின் மூலம் பணம் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. இச்சங்கம் பின்வரும் தேதிகளில் இரண்டு ஐஸ்கிரீம் விநியோக நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளது:

  • ஞாயிறு, ஜூலை 26
  • ஞாயிறு, ஆகஸ்ட் 23

இந்த இரண்டு நிகழ்வுகளும் மதியம் 12 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும். பங்களிப்புகள் ஒரு நபருக்கு 30 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குகின்றன, மேலும் அவை பிரச்சாரத்தின் ஐஸ்கிரீம் வழங்குநருக்கு நேரடியாகச் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

‘Spread Kindness’ அமைப்பானது, கோடைக்கால பிரச்சாரத்துடன் கூடுதலாக, அல் நஹ்தா 1-இல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11.15 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தொழிலாளர்களுக்காக வாராந்திர உணவு விநியோக நிகழ்வையும் ஏற்பாடு செய்கிறது.

இந்த முயற்சி, அமீரகத்தில் வெளிப்புறப் பணியாளர்களுக்கான அல் ஃபிரீஜ் ஃப்ரிட்ஜ் பிரச்சாரம் மற்றும் வருடாந்திர நண்பகல் வேலைத் தடை உள்ளிட்ட பிற கோடைக்கால நலத்திட்டங்களுக்குத் துணைபுரிகிறது.

ஆகவே, தன்னார்வத் தொண்டு செய்ய அல்லது பங்களிக்க விரும்பும் குடியிருப்பாளர்கள் 056 312 7666 என்ற எண்ணில் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel