கோடைக்காலப் பயணங்களுக்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தயாராகி வரும் நிலையில், பலர் தங்கள் பாஸ்போர்ட்டுகளைப் புதுப்பிக்கவும், விசா நடைமுறைகளை மேற்கொள்ளவும், பிற தூதரகச் சேவைகளைப் பெறவும் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகச் சேவைகள் ஒரு முக்கிய மாற்றத்தைச் சந்தித்து வருவதால், இச்சேவைகள் வழங்கப்படும் இடங்கள் மற்றும் முறைகளில் தற்காலிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்த முழுமையான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
முந்தைய சேவை வழங்குநர்களுடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்ததாலும், புதிய ‘இந்தியத் தூதரக விண்ணப்ப மையங்கள்’ (ICACs) செயல்படத் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தாலும், இந்தியத் தூதரகச் சேவைகளில் தற்காலிகத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
Alhind Tours & Travels நிறுவனம் புதிய சேவை வழங்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், ஒப்பந்தப்புள்ளி (tender) நடைமுறை தொடர்பான சட்டச் சிக்கலால் பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற விவகாரம் தீர்க்கப்படும் வரை, அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் (CGI) ஆகியவை ஜூலை 1 முதல் குறிப்பிட்ட சில தூதரகச் சேவைகளை நேரடியாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, இந்தியத் தூதரக அலுவலகங்கள் தற்போது பின்வருவனவற்றிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றன:
- பாஸ்போர்ட் சேவைகள்
- விசா சேவைகள்
- ஆவணச் சான்றளிப்பு
- பிற தூதரகச் சேவைகள்
நேரங்கள் மற்றும் முன்பதிவு விதிகள்
சேவைகள் பின்வரும் நேரங்களில் கிடைக்கின்றன:
- திங்கள் முதல் சனி வரை- காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
இந்த தற்காலிக செயல்பாடுகளுக்கு முன்பதிவு (Appointment) தேவையில்லை. அனைத்து விண்ணப்பங்களும் நேரடியாக வருகை தரும் அடிப்படையில் (walk-in), முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற முறையிலேயே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகளவிலான கூட்டத்தைக் கட்டுப்படுத்த, விண்ணப்பதாரர் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிறு வயது விண்ணப்பதாரர்களுடன் (மைனர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் உடன் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக விண்ணப்பதாரர்கள் பணத்தை (Cash) கையில் எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் சில்லறை கிடைக்காமல் போகலாம் என்பதால், விண்ணப்பதாரர்கள் சரியான தொகையை ரொக்கமாக எடுத்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல், அட்டை (Card) மூலம் பணம் செலுத்துதல், வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் பிற டிஜிட்டல் கட்டண முறைகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதையும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
திருத்தப்பட்ட பாஸ்போர்ட் கட்டணங்கள்
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 2012-க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் கட்டண உயர்வு இதுவாகும்.
36 பக்க பாஸ்போர்ட்
- சாதாரண சேவை: 450 திர்ஹம்
- தத்கால் (அவசர சேவை): 900 திர்ஹம்
60 பக்க பாஸ்போர்ட்
- சாதாரண சேவை: 630 திர்ஹம்
- தத்கால் (அவசர சேவை): 1,080 திர்ஹம்
தூதரகத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?
தூதரக அலுவலகத்தில் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விண்ணப்பதாரர்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். துபாயில், ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தூதரகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
ஆகவே, சேவையை மேம்படுத்தும் வகையில், தூதரகம் பின்வருவனவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது:
- டோக்கன் முறை
- காத்திருப்பதற்கான கூடாரங்கள்
- இலவச தேநீர் மற்றும் சிற்றுண்டி
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான பிரத்யேக இடம்
- விண்ணப்பதாரர்களுக்கு உதவ 100-க்கும் மேற்பட்ட தூதரகப் பணியாளர்கள்
மேலும், ஆவணங்களைச் சான்றளிக்க (attestation) வேண்டிய விண்ணப்பதாரர்கள், தற்காலிக சேவை மையங்களுக்கும் செல்லலாம்:
- இந்தியன் அசோசியேஷன் ஷார்ஜா (Indian Association Sharjah) – ஜூலை 4 மற்றும் 5 (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை)
- இந்தியன் சோஷியல் கிளப், ஃபுஜைரா (Indian Social Club, Fujairah) – ஜூலை 5 (காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை)
விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் உடன் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், விபரங்களுக்கு பின்வரும் வழிகளில் தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம்:
- கட்டணமில்லா எண்: 800 46342 (800 INDIA)
- வாட்ஸ்அப் (WhatsApp): +971 54 309 0571
- மின்னஞ்சல்: pbsk.dubai@mea.gov.in
அல்ஹிந்த் (Alhind) நிறுவனம் எப்போது பொறுப்பேற்கும்?
இந்தியாவில் சட்ட நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த மாற்றத்திற்கான செயல்முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டிற்கான ஆயத்தப் பணிகளை முடித்துவிட்டதாகவும், அனுமதி கிடைத்தவுடன் சேவையைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் அல்ஹிந்த் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய ICAC மையங்கள் எங்கு அமைந்துள்ளன?
செயல்பாட்டிற்கு வந்தவுடன், இந்த புதிய இந்தியத் தூதரக விண்ணப்ப மையங்கள் (ICAC) ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள 16 இடங்களில் விண்ணப்பதாரர்களுக்குச் சேவைகளை வழங்கும்:
- அபுதாபி (அல் தானா, அல் ரீம், முசாஃபா)
- அல் அய்ன்
- கயாதி
- மதீனத் சையத்
- பர் துபாய்
- துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் (DIP)
- அல் மஜாஸ்
- ரோல்லா
- அஜ்மான்
- ஃபுஜைரா
- உம் அல் குவைன்
- கோர்ஃபக்கான்
- கல்பா
- ராஸ் அல் கைமா
அதுவரை, விண்ணப்பதாரர்கள் தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் தற்காலிக ‘நேரடி வருகை’ (walk-in) சேவைகளைப் பயன்படுத்துமாறும், புதிய மையங்களின் முழுமையான செயல்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel