துபாயில் அல் யலாயிஸ் நிலையத்தைத் திறப்பதன் மூலம் எதிஹாட் ரயில் தனது பயணிகள் வலையமைப்பை விரிவுபடுத்தத் தயாராகி வரும் நிலையில், இரைச்சல், உடை, உணவு, புகைப்படம் எடுத்தல் மற்றும் இடையூறு விளைவிக்கும் நடத்தை உள்ளிட்ட பயணிகள் பின்பற்ற வேண்டிய அனைத்து தெளிவான விதிமுறைகளையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய இரயில்வே, அமீரகம் முழுவதும் உள்ள மேலும் பல நகரங்களையும் சமூகங்களையும் படிப்படியாக இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இரயில் பயணத்தை எளிதாக்கும். இந்த விரிவாக்கத்துடன், பயணங்களைப் பாதுகாப்பாகவும், வசதியாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்க வடிவமைக்கப்பட்ட பயணிகள் சாசனம் மற்றும் நடத்தை விதிகளை (Passenger Charter) எதிஹாட் ரயில் வகுத்துள்ளது.
உரத்த இசை உங்களை இரயிலிலிருந்து இறக்கிவிடக்கூடும்
பயணிகள் ரயிலில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் ஒலியின் அளவை மிதமான அளவில் வைத்திருக்க வேண்டும்.
ஒரு பயணி இசையையோ அல்லது பிற ஒலி சாதனங்களையோ சத்தமாக ஒலிக்கச் செய்து மற்றவர்களுக்கு இடையூறு விளைவித்தால், அங்கீகரிக்கப்பட்ட எதிஹாட் ரயில் ஊழியர்கள் அவர்களைப் பின்வருமாறு செய்யச் சொல்லலாம்:
- ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தவும்
- ஒலியளவைக் குறைக்கவும்
- சாதனத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தவும்
மேலும், தவிர்க்க முடியாத கடுமையான சந்தர்ப்பங்களில், அந்தப் பயணி அடுத்த நிலையத்தில் ரயிலை விட்டு வெளியேறும்படி கேட்கப்படலாம்.
பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படலாம் அல்லது வெளியேறும்படி கேட்கப்படலாம்
சில சூழ்நிலைகளில், எதிஹாட் ரயில் ஊழியர்கள் பயணிகளை ஒரு நிலையம் அல்லது ரயிலை விட்டு வெளியேறும்படி கோரலாம்.
பின்வரும் பயணிகள் இதில் அடங்குவர்:
- போதையில் இருப்பவர்கள் அல்லது தடைசெய்யப்பட்ட இடங்களில் போதை தரும் மதுபானத்தை வைத்திருப்பவர்கள்
- பயணம் செய்யத் தகுதியற்றவர்கள் எனக் கருதப்படுபவர்கள்
- ரயில்வே சொத்துக்களையோ அல்லது மற்றொரு பயணியின் உடைமைகளையோ அழுக்காக்கவோ அல்லது சேதப்படுத்தவோ கூடிய ஆடைகளை அணிந்திருப்பவர்கள்
- இடையூறு விளைவிக்கும், அச்சுறுத்தும், தவறான அல்லது புண்படுத்தும் விதத்தில் நடந்துகொள்பவர்கள்
- பயணிகள் அல்லது ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அபாயத்தை உருவாக்குபவர்கள்
விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, நிலையங்களில் பாதுகாப்புச் சோதனைகளும் அவ்வப்போது நடத்தப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிஹாட் இரயில் பயணிகளுக்கான முக்கிய விதிகள்
பயணிகள் பின்வருவனவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்:
- வழிகாட்டிப் பலகைகளையும் பணியாளர்களின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றவும்
- வரிசையில் ஒழுங்காக நிற்கவும், வரிசையைத் தாண்டிச் செல்வதைத் தவிர்க்கவும்
- கண்ணியமாகவும் நாகரிகமாகவும் ஆடை அணியவும்
- குறிப்பிட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் செய்வதைத் தவிர்க்கவும்
- அபாயகரமான அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது
- கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் அல்லது போதைப்பொருட்களை வைத்திருக்கவோ அல்லது உட்கொள்ளவோ கூடாது
- அனைத்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் பின்பற்றவும்
- இரயில் கதவுகள் அல்லது அவசரகால உபகரணங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்
- தவறான, அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் நடத்தையைத் தவிர்க்கவும்
- இரயில்களையும் நிலையங்களையும் சுத்தமாக வைத்திருக்கவும்
- குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட தொட்டிகளில் போடவும்
- அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும்
- கடுமையான வாசனையுள்ள உணவு அல்லது பானங்கள் மற்றும் சிந்தக்கூடிய அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய பொருட்களைத் தவிர்க்கவும்
ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் பயணிகள் குப்பை போடுவதற்கும் துப்புவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற பயணிகளைப் புகைப்படம் எடுத்தல்
பயணிகள், மற்றவர்களின் வெளிப்படையான அனுமதியின்றி அவர்களைப் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அல்லது பதிவு செய்யவோ கூடாது.
அதேபோல், வணிக ரீதியான புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல் அல்லது பதிவு செய்வதற்கு எதிஹாட் ரெயிலிடம் இருந்து முன் எழுத்துப்பூர்வ அனுமதி தேவை.
ரயில்வே வளாகத்தில் பொருட்களை விற்பனை செய்தல், விளம்பரம் செய்தல், சேவைகளை வழங்குதல், பிச்சை எடுத்தல், கணக்கெடுப்பு நடத்துதல் அல்லது பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றுக்கும் முன் எழுத்துப்பூர்வ அனுமதி தேவை.
ஒருவர் வெளியேற மறுத்தால் என்ன நடக்கும்?
அங்கீகரிக்கப்பட்ட எதிஹாட் ரெயில் ஊழியர் ஒருவர், விதிமீறல் சந்தேகத்தின் பேரில் ஒரு பயணியை வெளியேறச் சொல்லியும், அந்தப் பயணி மறுத்தால், பொருந்தக்கூடிய விதிகளுக்கு உட்பட்டு, பணியாளர்கள் நியாயமான தங்கள் பலத்தைப் பயன்படுத்தி அந்தப் பயணியை வெளியேற்றலாம். இந்த விதிமீறலுக்காக அந்தப் பயணி மற்ற விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
எதிஹாட் ரெயிலில் பயணிக்கத் தடை விதிக்கப்படலாம்
தொடர்ந்து செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது, எதிஹாட் ரெயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
டிக்கெட்டில் சரியான தேதி, நேரம் மற்றும் பயணியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும், மேலும் அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பயணிகள் சேவைகள் விரிவடைந்து வருவதால், புதிய ரயில் வலையமைப்பு அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும், சௌகரியமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்த சாசனத்தின் நோக்கமாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel