அமீரகத்தில் பணிக்குச் சென்றபோது மினிபஸ் மோதிய விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. உம் அல் குவைனில் (Umm Al Quwain) கடந்த வாரம் பணியாளர்களை ஏற்றிச் சென்ற நிறுவனத்தின் மினிபஸ் ஒன்று, பணிக்குச் செல்லும் வழியில் சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதில், கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் கேரளாவைச் சேர்ந்த 35 வயதான ஜேசன் ஆவார். ஆகஸ்ட் 17 அன்று அதிகாலையில் அஜ்மானில் உள்ள தங்கள் தங்குமிடத்திலிருந்து உம் அல் குவைனில் உள்ள பணித்தளத்திற்கு சுமார் 14 சக ஊழியர்களுடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சமூக ஆர்வலரின் கூற்றுப்படி, ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடல் நடுங்கத் தொடங்கியதால், வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததில் மினிபஸ் சாலைத் தடுப்புச் சுவரில் மோதியது தெரிய வந்துள்ளது.
ஓட்டுநருக்கு அருகிலுள்ள முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஜேசன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், மற்ற நான்கு ஊழியர்கள் காயமடைந்ததுள்ளனர்.
ஜேசனின் குடும்பத்தினர் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சமூக ஆர்வலர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட தேடலுக்குப் பிறகு அவரது மனைவிக்கு ஷார்ஜாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணி கிடைத்ததைத் தொடர்ந்து, ஜேசன் தனது மனைவியையும் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வந்திருந்தார். விபத்து நடந்தபோது அவரது பணி விசா (work visa) தொடர்பான நடைமுறைகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தம்பதியினர் அமீரகத்தில் வசித்து வந்த நிலையில், அவர்களின் மூன்று மற்றும் ஆறு வயதுடைய குழந்தைகள் இந்தியாவில் உறவினர்களுடன் தங்கியிருந்தனர்.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமீரகத்தில் வசித்து வந்த ஜேசன், அஜ்மானில் உள்ள ஒரு ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார்.
அவரது உடல் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற அவரது மனைவியும் இந்தியா திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், காயமடைந்த ஊழியர்களில் சிலர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். அதேவேளையில், ஒரு ஊழியரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மேல் சிகிச்சை மற்றும் குணமடைதலுக்காக அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படலாம் என்று சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய மினிபஸ் விபத்து
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கவலைகள் மீண்டும் எழுந்துள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜூன் 2026-ல், எமிரேட்ஸ் சாலையில் (Emirates Road) நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மினிபஸ் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள் மினிபஸ்களின் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே கவலைகளை எழுப்பியுள்ளதுடன், இத்தகைய விபத்துகளைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel