ADVERTISEMENT

ஆகஸ்ட் மாதத்தில் அமீரகத்தில் வரவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள்: குடியிருப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள் இங்கே…

Published: 1 Aug 2026, 12:34 PM |
Updated: 1 Aug 2026, 12:36 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு மாதமும் புதிய நடைமுறைகள், நிகழ்வுகள் மற்றும் விதிகள் என குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், வருகின்ற ஆகஸ்ட் மாதமும் நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் எதிர்பாராத கோடைக்கால மழை முதல், சிறந்த ஷாப்பிங் சலுகைகள், பயணத் தகவல்கள் மற்றும் புதிய கல்வி ஆண்டிற்கான ஆயத்தங்கள் என பரபரப்பான மாதமாக அமையவுள்ளது. நீங்கள் விடுமுறைக்குத் திட்டமிட்டிருந்தாலும், ஷாப்பிங் செல்லவிருந்தாலும் அல்லது குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்திக்கொண்டிருந்தாலும், வரும் வாரங்களில் அங்கு எதிர்பார்க்கப்படும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

1. பொது விடுமுறை

முஸ்லிம்களால் இறைவனின் இறுதித் தூதராகக் கருதப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை ஒன்றை மக்கள் எதிர்பார்க்கலாம்.

இஸ்லாமிய நாட்காட்டியின்படி ‘ரபி-உல்-அவ்வல்’ மாதத்தின் 12-ம் நாளான ஆகஸ்ட் 25, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று இந்நாள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதற்கான இறுதித் தேதி அதிகாரப்பூர்வ பிறை பார்ப்பதைப் பொறுத்தே அமையும்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் தனது வழக்கமான விடுமுறை மாற்றக் கொள்கையைப் பின்பற்றினால், பொது விடுமுறை ஆகஸ்ட் 24 (திங்கட்கிழமை) அன்று கடைபிடிக்கப்படலாம். இதன் மூலம் மக்களுக்கு நீண்ட வார இறுதி விடுமுறை கிடைக்கும்.

2. மழை மற்றும் தூசிக்கு வாய்ப்பு

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து 40°C-க்கு மேல் நீடித்தாலும், நாடு மீண்டும் ஒருமுறை நிலையற்ற வானிலையைச் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள கணிப்பின்படி, ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மதிய வேளைகளில் மேகமூட்டம் உருவாகி, ஆங்காங்கே மழை, பலத்த காற்று மற்றும் தூசிப் புயல் வீச வாய்ப்புள்ளது.

3.Summer Restaurant Week’ நிகழ்வில் பங்கேற்க கடைசி வாய்ப்பு

ஆகஸ்ட் 2-ம் தேதியுடன் நிறைவடையும் ‘Dubai Summer Restaurant Week’ நிகழ்வை அனுபவிக்க உணவுப் பிரியர்களுக்கு இன்னும் குறைந்த காலமே உள்ளன.

‘துபாய் சம்மர் சர்ப்ரைசஸ்’ (Dubai Summer Surprises) பெஸ்டிவலின் ஒரு பகுதியாக, துபாய் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட உணவகங்கள், மதிய மற்றும் இரவு உணவிற்கான சிறப்பு மெனுக்களைக் குறைந்த விலையில் இது வழங்குகின்து.

4. ஷாப்பிங் மீதான பெரும் தள்ளுபடிகள்

‘Great Dubai Summer Sale’ விற்பனை அதன் இறுதி வார இறுதியில் அடியெடுத்து வைக்கிறது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேவேளையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஃபிளாஷ் சேல்’ சலுகைகளில் 90 சதவீதம் வரை சேமிக்கலாம்.

இந்த விற்பனை முடிந்த பிறகும், ‘துபாய் சம்மர் சர்ப்ரைசஸ்’ நிகழ்வு ஆகஸ்ட் 30 வரை தொடரும் என்பதால், இம்மாதம் முழுவதும் கூடுதல் சலுகைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் ஷாப்பிங் வாய்ப்புகளை அனுபவிக்கலாம்.

5. விமானச் சேவைகளில் இடையூறு

பிராந்திய இடையூறுகள் காரணமாக பல சர்வதேச விமான நிறுவனங்கள் தங்கள் பயண அட்டவணைகளைத் தொடர்ந்து மாற்றியமைத்து வருகின்றன.

  • ஏர் பிரான்ஸ் ஆகஸ்ட் 11 முதல் துபாய் விமான சேவைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
  • ஏர் அஸ்தானா துபாய் சேவைகளை ஆகஸ்ட் 31 வரை நிறுத்தி வைத்துள்ளது.
  • ஏஜியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தனது சேவை இடைநிறுத்தத்தை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.
  • கேஎல்எம், பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேத்தே பசிபிக் மற்றும் லுஃப்தான்சா ஆகியவை செப்டம்பர் அல்லது அக்டோபர் வரை சில சேவைகளைத் தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன.

இதற்கிடையில், எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகியவை தங்களின் பெரும்பாலான திட்டமிடப்பட்ட விமான சேவைகளை வழக்கம் போல் தொடர்ந்து இயக்கி வருகின்றன.

6. துபாயில் புதிய ஷாப்பிங் மையம் திறப்பு

நாத் அல் ஷேபாவில் வசிப்பவர்களுக்கு விரைவில் ஒரு புதிய சில்லறை விற்பனை மையம் திறக்கப்படவுள்ளது. நாத் அல் ஷபா கார்டன்ஸில் அமைந்துள்ள புதிய சமூக வணிக வளாகமான தி கிராண்ட், ஆகஸ்ட் 19 அன்று திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது

முழுமையாக வாடகைக்கு விடப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், சுகாதார வசதிகள், நலவாழ்வு மையங்கள் மற்றும் அருகிலுள்ள சமூகங்களுக்கான பல்வேறு அன்றாட சேவைகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. பள்ளிகள் மீண்டும் திறப்பு

அமீரகம் முழுவதும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஏறக்குறைய முடிந்துவிட்டது. கல்வி அமைச்சகத்தின் கல்வி நாட்காட்டியைப் பின்பற்றும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31, திங்கட்கிழமை அன்று மீண்டும் திறக்கப்படும். இது 2026-2027 கல்வியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

2026 முதல் 2029 வரையிலான காலத்தை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய மூன்றாண்டு கல்வி நாட்காட்டியின்படி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இது, எதிர்காலப் பள்ளிப் பருவங்களுக்குக் குடும்பங்கள் முன்கூட்டியே திட்டமிட உதவுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel