ADVERTISEMENT

e& நிறுவனத்தின் வருவாய் 38.1 பில்லியன் திர்ஹமாக உயர்வு.. 251.5 மில்லியனை கடந்த சந்தாதாரர்கள்!!

Published: 1 Aug 2026, 5:46 PM |
Updated: 1 Aug 2026, 5:50 PM |
Posted By: Menaka

அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்ட தொழில்நுட்பக் குழுமமான e&, 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 38.1 பில்லியன் திர்ஹம் வருவாயைப் பதிவு செய்ததாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்த 34.2 பில்லியன் திர்ஹம் வருவாயுடன் ஒப்பிடுகையில் 11.6 சதவீத வளர்ச்சியாகும்.

ADVERTISEMENT

இக்குழுமத்தின் EBITDA (வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனொதுக்கீட்டிற்கு முந்தைய வருவாய்) ஆண்டுக்கு ஆண்டு 13.1 சதவீதம் அதிகரித்து 17.7 பில்லியன் திர்ஹமாக உயர்ந்தது. அதேவேளையில், நிகர லாபம் 6 பில்லியன் திர்ஹமாக இருந்தது. 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவு செய்யப்பட்ட ஒருமுறை லாபங்களை (one-off gains) தவிர்த்துப் பார்க்கையில் இது 2.4 சதவீத வளர்ச்சியாகும். இதன் EBITDA வரம்பு (margin) 46.5 சதவீதமாக இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி, நிறுவனத்தின் உலகளாவிய வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக விரிவடைந்து, ஆண்டுக்கு ஆண்டு 30.4 சதவீதம் அதிகரித்து 251.5 மில்லியன் சந்தாதாரர்களை எட்டியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்குள்ளும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சீராக வளர்ந்து, 6.4 சதவீதம் அதிகரித்து 16.5 மில்லியன் வாடிக்கையாளர்களை எட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

e& நிறுவனம் தனது சர்வதேச முதலீட்டுத் தொகுப்பு குறித்த மூலோபாய மதிப்பாய்வை நிறைவு செய்த நிலையில் இந்த வலுவான நிதிச் செயல்பாடு சாத்தியமானதாக தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இக்காலகட்டத்தில், அந்நிறுவனம் வோடபோன் குழுமத்தில் (Vodafone Group) இருந்த தனது முழு முதலீட்டையும் விலக்கிக்கொண்டது. இதன் மூலம் 21.9 பில்லியன் திர்ஹம் மொத்த ரொக்க வருவாயும், 4.8 பில்லியன் திர்ஹம் நிகர ரொக்க லாபமும் ஈட்டப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், Careem Technologies நிறுவனத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த 50.03 சதவீதப் பங்குகளில் 12.5 சதவீதப் பங்குகளை Uber நிறுவனத்திற்கு 367 மில்லியன் திர்ஹமிற்கு விற்றதன் மூலம், தனது முதலீட்டுத் தொகுப்பை மேலும் மறுசீரமைத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து e& நிறுவனத்தின் தலைவர் ஜாசெம் முகமது பு அதாபா அல்சாபி பேசுகையில், இந்த முடிவுகள், ஒரு உலகளாவிய டிஜிட்டல் தொழில்நுட்பத் தலைவராக உருவெடுப்பதில் நிறுவனத்தின் சீரான முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், “டிஜிட்டல் எதிர்காலத்தை வழிநடத்துவதில் குழுமம் சீரான முன்னேற்றம் கண்டுவருகிறது என்பதை இன்றைய எங்கள் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களை நாங்கள் சுறுசுறுப்புடன் வெற்றிகரமாகக் கையாண்டு, இந்த சவால்களை வணிக வளர்ச்சிக்கான உண்மையான வாய்ப்புகளாக மாற்றியுள்ளோம்,” என்று எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் தீர்வுகளில் தொடர்ச்சியான முதலீடுகள், நிறுவனத்தின் நிதிச் செயல்திறனில் முக்கியப் பங்கு வகித்துள்ளன என்பதையும் அல்சாபி சுட்டிக்காட்டியுள்ளார்.

வோடஃபோன் பரிவர்த்தனை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், நிறைவடைந்த இந்த விற்பனை மூலம் 21.9 பில்லியன் திர்ஹம்ஸ் ரொக்க வருவாய் ஈட்டப்பட்டதாகவும், 4.8 பில்லியன் திர்ஹம்ஸ் நிகர ரொக்க ஆதாயம் கிடைத்ததாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி மசூத் எம். ஷெரீஃப் மஹ்மூத் பேசுகையில், தொடர்ந்து வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைச் சவால்கள் இருந்தபோதிலும், e& நிறுவனம் மீள்திறனுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

நிறுவனம் ஒருங்கிணைந்த நிகர லாபமாக 6 பில்லியன் திர்ஹாம் ஈட்டியதாகவும், வலுவான பணப்புழக்கத்தையும், 46.5 சதவீத EBITDA லாப விகிதத்தையும் பராமரித்ததாகவும் குறிப்பிட்ட அவர், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளை உள்ளடக்கிய நிறுவனத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வணிகத் தொகுப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் முழுவதும் செயற்கை நுண்ணறிவை (AI) பரவலாகப் பயன்படுத்தியதே நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த முடிவுகள் எங்களின் செயலூக்கமான இடர் மேலாண்மை, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் வணிகங்களில் எங்கள் வணிகத் தொகுப்பைப் பன்முகப்படுத்தியது, மற்றும் புதுமையான AI பயன்பாடுகளை ஒருங்கிணைத்தது ஆகியவற்றிற்குச் சான்றாகும்,” என்று வலியுறுத்தினார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel