ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று முதல் தொடங்கும் இலையுதிர் காலம்.. படிப்படியாகக் குறையும் வெப்பநிலை!!

Published: 23 Sep 2026, 9:08 AM |
Updated: 23 Sep 2026, 9:08 AM |
Posted By: Menaka

கோடைக்காலத்தின் உச்சகட்ட வெப்பத்திலிருந்து படிப்படியான நிவாரணத்தை அளிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகம் இன்று (புதன்கிழமை, செப்டம்பர் 23) இலையுதிர் காலத்தை வரவேற்கத் தயாராக உள்ளது.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் (Emirates Astronomical Society) தலைவர் இப்ராஹிம் அல் ஜார்வான் அவர்களின் வானியல் கணக்கீடுகளின்படி, இலையுதிர் காலம் அதிகாரப்பூர்வமாக அதிகாலை 4:05 மணிக்குத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அப்போது விடியற்காலையில் கிழக்கு வானத்தில் மிதுனம் (Gemini), ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo) ஆகிய ராசி மண்டலங்களும், சிரியஸ் (Sirius), கனோபஸ் (Canopus) மற்றும் பிளையாட்ஸ் (Pleiades) போன்ற முக்கிய நட்சத்திரங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

மேலும், இப்பருவத்தில் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலையுதிர் காலத்தின் தொடக்கத்தில் சுமார் 39°C ஆக இருக்கும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை, பருவத்தின் முடிவில் சுமார் 26°C ஆகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, நவம்பர் மாதத் தொடக்கத்தில், வெப்பநிலை அதிகபட்சமாக சுமார் 31°C வரையிலும், குறைந்தபட்சமாக 18°C ​​வரையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இலையுதிர் காலத்தின் இறுதிக்கட்டத்தில், அதிகபட்ச வெப்பநிலை 25°C ஆகவும், இரவு நேர வெப்பநிலை சுமார் 13°C ஆகவும் குறையக்கூடும்.

மழைக்கான வாய்ப்புகள்

இதனிடையே, அக்டோபர் மாதத்தின் நடுவில் குளிர்கால மேகக் கூட்டங்கள் வரத் தொடங்கும் என்றும், இலையுதிர் காலத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதேசமயம், இப்பருவத்தின் முதல் பாதியில் ஈரப்பதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் மூடுபனி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இலையுதிர் கால சம இரவு நாள் (Autumnal Equinox)

சூரியன் தெற்கு நோக்கி நகரும்போது பூமத்திய ரேகைக்கு நேர் மேலே வரும்போது ‘இலையுதிர் கால சம இரவு நாள்’ (Autumnal Equinox) நிகழ்கிறது. இதன் விளைவாக பகல் மற்றும் இரவு நேரங்கள் ஏறக்குறைய சமமான கால அளவைக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சம இரவு நாளுக்குப் பிறகு சுமார் ஒரு வார காலத்தில், இரவு நேரம் படிப்படியாக நீளமாகவும், பகல் நேரம் குறையவும் தொடங்கும். அரேபிய தீபகற்பம் முழுவதும் இலையுதிர் காலத்தின் முதல் பாதி ஒரு முக்கியமான பயிரிடும் காலமாகக் கருதப்படுகிறது என்றும் அல் ஜார்வான் கூறியுள்ளார். இக்காலத்தில் விவசாயிகள் நாற்றுகளை இடமாற்றம் செய்தல், கன்றுகளை நடுதல் மற்றும் இலையுதிர் கால விவசாயப் பருவத்திற்கான விதைகளை விதைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

சூரியனின் நிலை தெற்கு நோக்கி மாறுவதால், பருவ மாற்றத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நண்பகல் நேர நிழலின் நீளமும் படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel