துபாயின் சுற்றுலா இடங்களில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் துபாய் மாலில் இருக்கக்கூடிய ஃபவுண்ட்டைன் தற்பொழுது புதுப்பொலிவுடன் பார்வையாளர்களை ஈர்க்க தயாராகியுள்ளது. துபாய் மால் மற்றும் புர்ஜ் கலிஃபா அருகே உள்ள புர்ஜ் ஏரியிலிருந்து எழும் பிரம்மாண்டமான வெள்ளி நிறக் கட்டமைப்புகள் மற்றும் கொட்டும் நீர் அம்சங்களுடன், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய கண்கொள்ளாக் காட்சியை விரைவில் வழங்கவுள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில், ஏரியிலிருந்து எழும் உயரமான, பிரதிபலிக்கும் அமைப்புகள் காட்டப்பட்டுள்ளன. இந்த சிற்ப அமைப்புகள், உலகின் மிக உயரமான கட்டிடத்தின் பின்னணியில் ஒரு குறிப்பிடத்தக்க காட்சி அம்சத்தை உருவாக்குகின்றன.
இருப்பினும், நிறுவல் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. இறுதி மெருகூட்டும் பணிகள் தொடர்வதால், அமைப்புகளைச் சுற்றி தொழிலாளர்களையும் உபகரணங்களையும் காண முடிகிறது, அதே நேரத்தில் ஏரிக்கரையின் ஒரு சிறிய பகுதிக்குத் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம், இந்தப் பணிகள் நடைபெறும்போதும் துபாய் பவுண்டைனின் வழக்கமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் டெவலப்பர் Emaar அறிவித்த பரந்த அளவிலான மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக துபாய் பவுண்டைனிற்கு இந்த அமைப்புகள் தோன்றியுள்ளன.
இதற்கு முன்னதாக விரிவான புனரமைப்புப் பணிகளுக்காக ஐந்து மாதங்கள் மூடப்பட்டிருந்த இந்தக் கவர்ச்சியான இடம், அக்டோபர் 2025-ல் மீண்டும் திறக்கப்பட்டது. அதன் தோற்றத்தையும் நீண்டகால நம்பகத்தன்மையையும் மேம்படுத்துவதற்காக, முதல் கட்டத்தில் புதிய டைலிங், வாட்டர் ப்ரூஃபிங் மற்றும் வர்ணம் பூசுதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
மேலும், பார்வையாளர்களின் அனுபவத்திற்குப் புதிய அம்சங்களையும் மேம்பாடுகளையும் வழங்கும் வாக்குறுதியுடன், 2026-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட மேம்பாடுகளையும் Emaar நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சம்
எமார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, லாஸ் வேகாஸில் உள்ள புகழ்பெற்ற பெல்லாஜியோ நீரூற்றுகளுக்குப் பின்னால் உள்ள நிறுவனமான, கலிபோர்னியாவைச் சேர்ந்த WET டிசைன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட துபாய் ஃபவுண்டைன், முதன்முதலில் 2009-ல் திறக்கப்பட்டது.
இந்த எமிரேட்டின் மிகவும் பிரபலமான கவர்ச்சி மையங்களில் ஒன்றான இது, பார்வையாளர்களுக்காக நிகழ்ச்சிகளை உருவாக்க, திட்டமிடப்பட்டு வெளியாக்கப்படும் நீர், இசை மற்றும் ஒளியமைப்புகளை ஒருங்கிணைக்கிறது. இசைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளுடன், தண்ணீரை சுமார் 140 மீட்டர் உயரம் வரை காற்றில் பீய்ச்சி அடிக்கக் கூடிய திறனுடன் இவை உள்ளன.
Emaar வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலின்படி, மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் மாலை நேரக் காட்சிகள் நடைபெறுகின்றன, அத்துடன் கூடுதல் பிற்பகல் காட்சிகளும் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, புதிய நீர்முனை அமைப்புகள் வடிவம் பெறும் வரை பார்வையாளர்கள் தங்களுக்குப் பரிச்சயமான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கண்டு ரசிக்கலாம். இது டவுன்டவுன் துபாயின் பிரபலமான இந்த ஈர்ப்பிடத்திற்கு மற்றொரு காட்சி அம்சத்தைச் சேர்க்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel