பெட்ரோல், டீசலை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளில் வளைகுடா நாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்து வருகின்றன. இந்நிலையில் தற்பொழுது இந்த எரிபொருள் நிரப்புவதற்காக முதன்முறையாக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமானில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஓமனில் எரிபொருள் தேவை அதிகரித்ததன் காரணமாக விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் தனது எல்லைப் பகுதிகளுக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிலையங்களில், முதன்முறையாக எரிபொருள் நிரப்புவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருமுறை எரிபொருள் வாங்குவதற்கான அளவை 30 லிட்டராகக் குறைத்து தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஓமானின் வணிகம், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சகம் (Tejarah), தேசிய மானியக் குழுவின் (NSC) ஒப்புதலுடன் இந்தக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. இது நாட்டின் எல்லைப் பகுதிகளிலிருந்து 50 கி.மீ சுற்றளவுக்குள் அமைந்துள்ள பெட்ரோல் நிலையங்களுக்குப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, அதிகமான வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை
- எரிபொருள் அளவு: எல்லைப் பகுதிகளிலிருந்து 50 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள பெட்ரோல் நிலையங்களில், ஒருமுறை எரிபொருள் நிரப்பும்போது அதிகபட்சம் 30 லிட்டர் வரை மட்டுமே வாங்க முடியும்.
- மீண்டும் நிரப்புதல்: வாகன ஓட்டிகள் ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம் என்று அமைச்சகத்தின் பொது இயக்குநர் நஸ்ரா பிந்த் சுல்தான் அல்-ஹப்சி தெளிவுபடுத்தியுள்ளார்.
- யாருக்குப் பொருந்தும்? இந்த 30 லிட்டர் கட்டுப்பாடு ஒரு நபருக்கா அல்லது ஒரு வாகனத்திற்கா என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
- எவ்வளவு காலம் நீடிக்கும்? இந்தக் கட்டுப்பாடு எவ்வளவு காலம் அமலில் இருக்கும் என்பதற்கான காலக்கெடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- எந்தெந்த நிலையங்கள் பாதிக்கப்படும்? எல்லைப் பகுதிகளிலிருந்து 50 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். ஓமானின் பிற பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எந்த மாற்றமும் இல்லை.
எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சகம், OQ நிறுவனம் மற்றும் பெட்ரோலிய சந்தைப்படுத்தல் நிறுவனங்களுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட நிலையங்களில் எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓமானில் தற்போதைய எரிபொருள் விலைகள்
ஓமன் சுல்தானகத்தில் தற்போதுள்ள எரிபொருள் சில்லறை விலைகள் பின்வருமாறு:
- M91 பெட்ரோல்: ஒரு லிட்டருக்கு 0.229 ஓமானி ரியால் (OMR)
- M95 பெட்ரோல்: ஒரு லிட்டருக்கு 0.239 ஓமானி ரியால் (OMR)
- அல்டிமேக்ஸ் 98 (Ultimax 98): ஒரு லிட்டருக்கு 0.399 ஓமானி ரியால் (OMR)
- டீசல்: ஒரு லிட்டருக்கு 0.258 ஓமானி ரியால் (OMR)
விதிமுறைகளை மீறிய நான்கு பெட்ரோல் நிலையங்கள்
இந்த அறிவிப்புக்கு முன்னதாக, அக்டோபர் 22 அன்று, வணிகம், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சகம் (Tejarah) மேற்கொண்ட ஆய்வில், நான்கு பெட்ரோல் நிலையங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்திருந்தது. போக்குவரத்து டேங்கர்களுக்கு எரிபொருள் விற்பனை செய்வதற்கான விதிமுறைகளை மீறி, நிர்ணயிக்கப்பட்ட 100 லிட்டர் வரம்பை அந்த நிலையங்கள் மீறியது கண்டறியப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், எரிபொருள் சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் அவற்றின் தொடர்புடைய நிறுவனங்களும் தங்கள் செயல்பாடுகளை நிர்வகிக்கும் சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் தேவைகளுக்கு இணங்குமாறு அந்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, உரிமங்களைச் சரிபார்க்கவும், அங்கீகரிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யவும், நுகர்வோருக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் தாங்கள் தொடர்ந்து ஆய்வுகளை நடத்துவதாக Tejarah கூறியுள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel