துபாயின் மிக முக்கியமான அடையாளங்களுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி, ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து, ‘ஷேக் சையத் சாலையில்’ (Sheikh Zayed Road) ஓடுவது என்பது பலருக்கும் சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த அற்புதமான அனுபவம், நாளை (நவம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் வரவுள்ளது. துபாய்வாசிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘துபாய் ரன் 2026’ நிகழ்வின் மூலம், அந்நகரின் பரபரப்பான நெடுஞ்சாலை ஒரு பிரம்மாண்டமான ஓட்டப்பந்தயத் தடமாக மாறவுள்ளது.
‘துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்’ (Dubai Fitness Challenge – DFC) நிகழ்வின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இந்த இலவச நிகழ்வில், அனுபவம் வாய்ந்த ஓட்டப்பந்தய வீரர்கள், முதல்முறையாகப் பங்கேற்பவர்கள், குடும்பங்கள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் என அனைவரும் கலந்துகொள்ளலாம். பங்கேற்பாளர்கள் 5 கி.மீ மற்றும் 10 கி.மீ ஆகிய இரு பாதைகளில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த ஓட்டம் ஞாயிறு காலை 6:30 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஓட்டத்திற்குத் தயாராகும் முன், பதிவு செய்தல், ‘பிப்’ (bib – அடையாள அட்டை) பெறுதல், போக்குவரத்து வசதிகள் மற்றும் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தல் போன்ற சில விஷயங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
துபாய் ரன் 2026 எப்போது தொடங்குகிறது?
துபாய் ரன், 2026-ஆம் ஆண்டு நவம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
- தேதி: ஞாயிறு, நவம்பர் 22
- தொடக்க நேரம்: காலை 6:30 மணி
- தொடக்கக் கோடு மூடப்படும் நேரம்: காலை 8:00 மணி
- நிகழ்வு நிறைவடையும் நேரம்: காலை 9:00 மணி
மேலும், பங்கேற்பாளர்கள், தங்களுக்கு உறுதிப்படுத்தல் மின்னஞ்சலில் (confirmation email) குறிப்பிடப்பட்டுள்ள நேர இடைவெளியின்படி நிகழ்விடத்திற்கு வர வேண்டும்.
துபாய் ரன் இலவசமா? எவ்வாறு பதிவு செய்வது?
ஆம், துபாய் ரன் முற்றிலும் இலவசமானது, ஆனால் இதில் பங்கேற்கப் பதிவு செய்வது கட்டாயமாகும்.
பங்கேற்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dubairun.com மூலம் பதிவு செய்துகொள்ளலாம். அதற்குத் தேவையான விவரங்கள் பின்வருமாறு:
- முழுப் பெயர் மற்றும் பிறந்த தேதி
- மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
- பாலினம் மற்றும் வசிக்கும் நகரம்
- தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டத் தூரம் மற்றும் தொடக்க நேரம்
- அவசர காலத் தொடர்பு எண்
மேலும், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள், தங்களது மூன்று குழந்தைகள் வரை இதில் பதிவு செய்யலாம். 18 வயதிற்குட்பட்ட பங்கேற்பாளர்கள் ஒரு பெரியவருடன் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கான பதிவு தொடர்பான பொறுப்புத் துறப்பு ஆவணத்தை (registration waiver) பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாய் ரன் ‘பிப்’ (bib) அடையாள அட்டையை எங்கே பெறுவது?
ஒவ்வொரு பங்கேற்பாளரும் நிகழ்வு நாளுக்கு முன்பாகவே, தங்களுக்குரிய ‘பிப்’ (bib) அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பந்தய அடையாள அட்டை (Bib) பெறும் இடம், ஜபீல் பூங்காவில் உள்ள துபாய் நகராட்சியின் 30×30 ஃபிட்னஸ் வில்லேஜ் ஆகும்.
பந்தய அடையாள அட்டை பெறும் தேதிகள்: நவம்பர் 9 முதல் 21 வரை
திறந்திருக்கும் நேரம்:
- திங்கள் முதல் வியாழன் வரை: மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை
- வெள்ளி: மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை
- சனி மற்றும் ஞாயிறு: காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை
5 கி.மீ அல்லது 10 கி.மீ: எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது?
இரண்டு பாதைகளும் எதிர்கால அருங்காட்சியகத்திற்கு (Museum of the Future) அருகில் உள்ள ஷேக் சையத் சாலையில் (Sheikh Zayed Road) தொடங்குகின்றன. பங்கேற்பாளர்கள் தங்கள் உடற்தகுதி நிலைகள் மற்றும் எவ்வளவு தூரம் ஓட விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து தங்களுக்கான பாதையை தேர்வு செய்து கொள்ளலாம்.
5 கி.மீ பாதை – குடும்பங்கள் மற்றும் தொடக்கநிலையாளர்களுக்கு
- எதிர்கால அருங்காட்சியகத்திற்கு அருகில் தொடங்குகிறது.
- துபாய் மாலுக்கு (Dubai Mall) அருகில் உள்ள ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வர்டில் (Sheikh Mohammed bin Rashid Boulevard) முடிகிறது.
- குடும்பங்கள், முதல் முறை ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் நடக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.
10 கி.மீ பாதை – நீண்ட தூர சவாலுக்கு
- எதிர்கால அருங்காட்சியகத்திற்கு அருகில் தொடங்குகிறது.
- ஷேக் சையத் சாலை வழியாகத் தொடர்கிறது.
- எமிரேட்ஸ் டவர்ஸ் அருகே உள்ள DIFC கேட் கட்டிடத்தில் முடிவடைகிறது.
துபாய் ரன் ஒரு போட்டிப் பந்தயம் அல்ல. பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த வேகத்தில் ஓடலாம், மெதுவாக ஓடலாம் அல்லது நடக்கலாம்.
மெட்ரோ மூலம் துபாய் ரன்னை அடைவது எப்படி?
பங்கேற்பாளர்களுக்கு வசதியாக துபாய் மெட்ரோ முன்கூட்டியே இயக்கப்படும். சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), நிகழ்வுக்கு முன்னதாக சிறப்பு இயக்க நேரங்கள் மற்றும் சாலை மூடல் திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரைக்கப்படும் மெட்ரோ நிலையங்கள்:
- 5 கி.மீ. வழித்தடத்திற்கு: வேர்ல்ட் டிரேட் சென்டர் மெட்ரோ நிலையம்
- 10 கி.மீ. வழித்தடத்திற்கு: எமிரேட்ஸ் டவர்ஸ் மெட்ரோ நிலையம்
இம்மாபெரும் நிகழ்வுக்கு வாகனத்தில் வரும் பங்கேற்பாளர்கள், 5 கி.மீ. வழித்தடத்திற்கு துபாய் மாலில் தங்கள் வாகனங்களை நிறுத்தலாம் அல்லது 10 கி.மீ. வழித்தடத்திற்கு துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டர் பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்தி, அங்கிருந்து மெட்ரோவில் தொடக்கப் புள்ளிக்குச் செல்லலாம்.
அதேபோல், திரும்பும் பயணத்திற்கு, பங்கேற்பாளர்கள் துபாய் மால், வேர்ல்ட் டிரேட் சென்டர், எமிரேட்ஸ் டவர்ஸ் மற்றும் மேக்ஸ் மெட்ரோ நிலையங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
மருத்துவர்கள் ஆலோசனை
நீங்கள் வழக்கமாக ஓடவோ அல்லது உடற்பயிற்சி செய்யவோ பழக்கமில்லாதவராக இருந்தால், போட்டிக்கு முன்பு உங்களை மிகவும் வருத்திக்கொள்வதற்குப் பதிலாக, மெதுவாகத் தொடங்கி உங்கள் உடல் வலிமையை படிப்படியாக வளர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஜெபல் அலியில் உள்ள ஆஸ்டர் செடார்ஸ் மருத்துவமனை மற்றும் கிளினிக்கின் சிறப்பு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரஃபீக் அகமது, ஆரம்பநிலையாளர்கள் படிப்படியாகத் தயாராகி, தங்கள் உடலின் தேவைகளைக் கவனித்தால் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், குறுகிய நேர மெது ஓட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வேகமான நடைப்பயிற்சியுடன் தொடங்குமாறு அவர் பரிந்துரைத்துள்ளார். அவரது அறிவுரையின் படி, பங்கேற்பாளர்கள் தங்கள் தூரத்தையும் கால அளவையும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும் மற்றும் போட்டிக்குச் சற்று முன்பு தீவிரமான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது சிறந்தது.
இது தவிர, போட்டி நாளன்று, ஓட்டப்பந்தய வீரர்கள் லேசான உணவை உட்கொள்ளவும், நீரேற்றத்துடன் இருக்கவும், ஏற்கனவே பயிற்சியின் போது பயன்படுத்திய வசதியான ஓடும் காலணிகளை அணியவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஓட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு இரத்த அழுத்தத்தைச் சரிபார்க்கவும், தேவைப்பட்டால் இரத்தச் சர்க்கரை அளவைக் கண்காணிக்கவும், ஏற்கனவே உள்ள மருத்துவ நிலைகளைக் கருத்தில் கொள்ளவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும், பங்கேற்பாளர்கள் ஓடுவதற்கு முன்பு உடலைத் தயார்படுத்தவும், ஓடிய பிறகு உடலை ஆசுவாசப்படுத்தவும், நீட்சிப் பயிற்சிகளைச் செய்யவும், போதுமான தூக்கம் பெறவும், தங்கள் உடல்கள் மீண்டுவர நேரம் கொடுக்கவும் வேண்டும்.
அதேசமயம், மார்பு வலி அல்லது அசௌகரியம், வழக்கத்திற்கு மாறான மூச்சுத்திணறல், படபடப்பு, தலைச்சுற்றல் அல்லது உடற்பயிற்சியின் போது ஏற்படும் தொடர்ச்சியான வலி போன்ற அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் பங்கேற்பாளர்களை எச்சரித்தனர்.
இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அனுபவிக்கும் எவரும் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel