ADVERTISEMENT

துபாயில் கட்டுமானப் பொருட்களுக்கும் பாஸ்போர்ட்! 2027 முதல் எஃகு, அலுமினியம், சிமெண்ட்டுக்கு புதிய விதிமுறை!

Published: 21 Nov 2026, 5:18 PM |
Updated: 21 Nov 2026, 5:18 PM |
Posted By: Menaka

துபாய் எமிரேட்டானது, கட்டுமானப் பொருட்களுக்கான புதிய பாஸ்போர்ட் முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இது, உற்பத்தி மற்றும் பயன்பாட்டிலிருந்து, மறுசுழற்சி செய்வது வரையிலான அவற்றின் பயணத்தை அதிகாரிகள் கண்காணிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதன்படி “கட்டுமானப் பொருட்கள் பாஸ்போர்ட்” 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஆரம்பத்தில் எஃகு, அலுமினியம் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றை உள்ளடக்கும் என்றும் துபாய் முனிசிபாலிட்டி, துபாய் ஃபியூச்சர் வீக் 2026 நிகழ்வின் போது செய்தி ஊடகங்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நகராட்சியின் கட்டிட அனுமதித் துறையின் கட்டிடக்கலைப் பொறியாளர் சலாமா அல் சுவைதி அவர்கள் பேசுகையில், “உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உட்பட, எமிரேட்டின் கட்டுமானத் துறையில் உள்ள அனைவருக்கும் இந்த முறை கட்டாயமாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படும்?

அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஆய்வகத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித்துவமான எண் ஒதுக்கப்படும். அதன் தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் விவரக்குறிப்புகள் துபாய் முனிசிபாலிட்டியால் நிர்வகிக்கப்படும் ஒரு மைய அமைப்பில் பதிவு செய்யப்படும்.

மேலும், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த அமைப்பு மூலம் விண்ணப்பித்து, தேவையான தொழில்நுட்ப விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முனிசிபாலிட்டி ஒரு பாஸ்போர்ட்டை வழங்கும்.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் பொருட்கள் செல்லாதவையாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, வெவ்வேறு நிறுவனங்களால் வழங்கப்படும் சிமெண்ட்டிற்குத் தனித்தனி பாஸ்போர்ட்கள் வழங்கப்படும். இது, ஒவ்வொரு பொருளையும் அதிகாரிகள் அடையாளம் கண்டு கண்காணிக்க உதவும் என கூறப்படுகின்றது.

இந்த முயற்சியானது, துபாயின் கட்டுமானத் துறையை, கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டு, இடிக்கப்பட்ட பிறகு இறுதியில் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய அமைப்பின் கீழ், இடிக்கப்பட்ட கட்டிடங்களிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் சோதனைக்காக ஆய்வகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அவற்றில், புனரமைக்கக்கூடியவை பதப்படுத்தப்பட்டு புதிய கட்டுமானத் திட்டங்களில் மீண்டும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, எஃகு அதன் வலிமையில் 50 சதவீதத்தைத் தக்கவைத்துக் கொள்வதை அல் சுவைதி உதாரணமாகக் குறிப்பிட்டார். அந்த வகையில், கட்டுமானப் பொருளாக மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு, அதை வலுப்படுத்திப் பதப்படுத்த முடியும்.

“இது ஒரு முடிவில்லாத வாழ்க்கைச் சுழற்சி,” என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒரு கட்டிடம் இடிக்கப்படும்போது, கட்டுமானப் பொருட்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்கவும் இந்த பாஸ்போர்ட் அமைப்பு அதிகாரிகளுக்கு உதவும் என கூறப்படுகின்றது.

ஒரு கட்டிடத்திற்குப் பொறுப்பானவர்கள், அதன் பாஸ்போர்ட்களில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களுக்குக் கணக்குக் காட்ட வேண்டும். மேலும், மறுசுழற்சி செய்யக்கூடிய எந்தப் பொருளும் ஏன் மறுசுழற்சி செய்யவில்லை அல்லது மீண்டும் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் விளக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்த முயற்சி, இறக்குமதி செய்யப்படும் கட்டுமானப் பொருட்களின் மீதான சார்பைக் குறைக்கும், செலவுகளையும் கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்கும், மேலும் நிலையான கட்டிட நடைமுறைகளை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான தகவலின் படி, முதல் கட்டம் எஃகு, அலுமினியம் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இருப்பினும், முனிசிபாலிட்டி இறுதியில் இந்த பாஸ்போர்ட் முறையை அனைத்து கட்டுமானப் பொருட்களுக்கும் விரிவுபடுத்த இலக்கு கொண்டுள்ளது என கூறப்படுகின்றது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel