ADVERTISEMENT

ஃபுஜைராவில் நடந்த பயங்கர சாலை விபத்து: 14 பேர் பலி, 30 பேர் காயம்!!

Published: 12 Nov 2026, 7:41 PM |
Updated: 12 Nov 2026, 7:47 PM |
Posted By: Menaka

ஃபுஜைராவில் உள்ள ஷேக் கலீஃபா பின் சையத் சாலையில், இன்று அதிகாலையில் நடந்த ஒரு பெரிய சாலை விபத்தில் 14 பேர் பலியானதாகவும், மேலும் 30 பேர் காயமடைந்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் படி, நள்ளிரவுக்கு முன்பு இந்த விபத்து நிகழ்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. ஒரு லாரி ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு காரின் மீது மோதியதில், அந்தக் கார் கவிழ்ந்தது. கவிழ்ந்த அந்த வாகனம், போக்குவரத்து நெரிசலில் நின்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த பயங்கரமான மோதலில் 18 வாகனங்கள் மற்றும் 5 லாரிகள் விபத்துக்குள்ளானதாகவும், அதில் ஒரு லாரியில் தீப்பிடித்ததுடன், மேலும் அந்தத் தீ விபத்துக்குள்ளாகி சேதமடைந்த பல வாகனங்களுக்கும் பரவி, இந்த விபத்தை மேலும் மோசமாக்கியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் காயமடைந்த 30 பேரில், 15 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 பேர், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஃபுஜைரா காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் ஐக்கிய அரபு அமீரக நாட்டினரும் அடங்குவதாகவும், மேலும் சிலரின் அடையாளங்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் இன்னும் கண்டறியப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

காயமடைந்தவர்களில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தியா, பிரேசில், பாகிஸ்தான், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளைத் தொடரும் அதிகாரிகள்

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது மற்றும் அவர்களின் உடல்நிலையைக் கண்காணிப்பது உட்பட, விபத்தின் பின்விளைவுகளைத் தொடர்ந்து நிர்வகித்து வருகின்றனர்.

இதற்கிடையில், உள்துறை அமைச்சகம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்தியுள்ளது.

மேலும், பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான தளங்களையே நம்ப வேண்டும் என்றும், விபத்து குறித்த வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel