மத்தியக்கிழக்கு பகுதியில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள் இருந்தபோதிலும், உலகளாவிய வர்த்தகத்தில் நாட்டின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக்காட்டும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகம் நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் முதல் முறையாக 3 டிரில்லியன் திர்ஹம்கள் எனும் இமாலய இலக்கை நெருங்கியுள்ளது.
சமீபத்திய அறிக்கைகளின் படி, ஜனவரி முதல் செப்டம்பர் 2026 வரையிலான வர்த்தகம் 2.945 டிரில்லியன் திர்ஹம்களை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகரிப்பை கண்டிருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், நவம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவித்துள்ளார்.
“முதல் முறையாக, நமது வெளிநாட்டு வர்த்தகம், ஒன்பது மாதங்களில் 3 டிரில்லியன் திர்ஹாம்களை நெருங்குகிறது, இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். மேலும், நமது பத்து பெரிய வர்த்தகப் பங்காளிகளுக்கான ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 31 சதவீதம் அதிகரித்துள்ளது,” என்று ஷேக் முகமது அவர்கள் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார மந்தம் மற்றும் அரசியல் சவால்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இருப்பினும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு, ஐக்கிய அரபு அமீரகம் ஒரு முக்கிய சர்வதேச வர்த்தக மையமாகத் தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கும், புதிய ஏற்றுமதி சந்தைகளை அடைவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கும் நாடு மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் ஷேக் முஹமதுஉஆ எடுத்துரைத்தார். இந்தச் சாதனைக்கு, தேசியத்தின் ஒற்றுமை மற்றும் நமது நாட்டின் கூட்டாளிகளே காரணம் என்று ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியான வளர்ச்சியில் அமீரகத்தின் வர்த்தகம்
2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியைத் தொடர்ந்து இந்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அப்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் அல்லாத வெளிநாட்டு வர்த்தகம், கடந்த ஆண்டை விட 13.1 சதவீதம் அதிகரித்து, 1.937 டிரில்லியன் திர்ஹாம்களை எட்டியது.
அந்த வகையில், சமீபத்திய 2.945 டிரில்லியன் திர்ஹாம் புள்ளிவிவரம், நாட்டின் வர்த்தகத் துறையின் தொடர்ச்சியான வேகத்தையும், சர்வதேச சந்தைகளில் அதன் வளர்ந்து வரும் இருப்பையும் பிரதிபலிக்கிறது என்று வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் ஜெயூதி கூறியுள்ளார்.
அல் ஜெயூதியின் கூற்றுப்படி, எண்ணெய் அல்லாத வெளிநாட்டு வர்த்தகம், 2024-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில் 37.2 சதவீதமும், 2023-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 55.2 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2023-இல் இந்த வர்த்தக மதிப்பு 1.9 டிரில்லியன் திர்ஹம்களாக இருந்ததாகவும், 2019-இல், இந்த எண்ணிக்கை 1.3 டிரில்லியன் திர்ஹம்களுக்கும் குறைவாகவே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
- செப்டம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில், எண்ணெய் அல்லாத வெளிநாட்டு வர்த்தகம் 1.025 டிரில்லியன் திர்ஹம்களை எட்டியுள்ளது.
- இது 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 7.1 சதவீத வளர்ச்சியாகும்.
- முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், வர்த்தகம் 11.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
- எண்ணெய் அல்லாத வர்த்தகம் முதல் காலாண்டில் 997.1 பில்லியன் திர்ஹம்களாகவும், இரண்டாம் காலாண்டில் 922.9 பில்லியன் திர்ஹம்களாகவும் இருந்தது.
அமீரகத்தின் எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகள் 73.7% வளர்ச்சி
இதற்கிடையில், சர்வதேச சந்தைகளில் ஐக்கிய அரபு அமீரகத் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதை அல் ஜெயூதி சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, 2024-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில், எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகள் 73.7 சதவீதம் அதிகரித்துள்ளன. அதில் சுவிட்சர்லாந்து, ஹாங்காங் மற்றும் இந்தியா ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்தின் தயாரிப்புகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய இடங்களாக இருந்துள்ளது.
அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகம் தனது ‘விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தங்கள்’ (CEPAs) மூலம் பல்வேறு நாடுகளுடனான வர்த்தகத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் வர்த்தகத்தை எளிதாக்குவதையும், உள்ளூர் வணிகங்களுக்குப் புதிய சந்தைகளைத் திறந்து விடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து, அங்கிருந்து பிற நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கான மிகப்பெரிய இலக்காக சவூதி அரேபியா உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஈராக் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஓமனுக்கு அனுப்பப்படும் பொருட்களின் அளவு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 71.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மொபைல்கள், வைரங்கள் மற்றும் கார்கள் ஆகியவை அடங்கும்.
அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய இறக்குமதி ஆதாரமாக சீனா தொடர்ந்து நீடிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஆண்டுகள் உள்ளன. அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி 5.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம், மொபைல் போன்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவை அதிகம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் முக்கியமானவையாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel