ADVERTISEMENT

அமீரகத்தில் ஜூன் 7 முதல் தொடங்கவுள்ள கடும் வெயில்..!!

Published: 5 Jun 2026, 8:40 PM |
Updated: 5 Jun 2026, 8:41 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண்டின் மிக வெப்பமான காலத்தின் வருகையோடு பாரம்பரியமாகத் தொடர்புடைய வானியல் நிகழ்வான பிளையாடிஸ் (Pleiades) நட்சத்திரக் கூட்டத்தின் வருடாந்திர விடியற்காலை உதயம் ஜூன் 7 அன்று இருக்கும் என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் (Emirates Astronomical Society) இயக்குநர்கள் குழுவின் தலைவரும், அரபு வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஒன்றியத்தின் உறுப்பினருமான இப்ராஹிம் அல் ஜர்வான் (Ibrahim Al Jarwan) அவர்களின் கூற்றுப்படி, அரபு மொழியில் ‘அல் துரையா’ (Al Thurayya) என்று அழைக்கப்படும் பிளையாடிஸ் நட்சத்திரக் கூட்டம், விடியற்காலையில் கிழக்கு திசையிலிருந்து சுமார் 25 டிகிரி வடக்கு திசையில் தோன்றும்.

பல நூற்றாண்டுகளாக, அரேபியர்கள் ‘அல் துரையா’வின் தோற்றத்தை கடும் கோடை வெப்பத்தின் தொடக்கத்துடன் தொடர்புபடுத்தி வந்துள்ளனர். கோடையின் மிக வெப்பமான காலம் என்பது பிளையாடிஸ் உதயத்திலிருந்து, பொதுவாக ஆகஸ்ட் மாத இறுதியில் தோன்றும் ‘சுஹைல்’ (Suhail) நட்சத்திரத்தின் தோற்றம் வரை நீடிக்கும் என்று பாரம்பரியப் பழமொழிகள் விவரிக்கின்றன.

ADVERTISEMENT

கோடையின் மிக வெப்பமான காலம்

“பிளையாடிஸ் உதயம்” என்று அழைக்கப்படும் இந்தக் காலம் ஜூன் 7 முதல் ஜூன் 19 வரை 13 நாட்களுக்கு நீடிக்கும். பிளையாடிஸ் நட்சத்திரக் கூட்டம் மற்றும் ‘அல்டெபரன்’ (Aldebaran) ஆகிய இரண்டின் தோற்றத்தையும் உள்ளடக்கிய பரந்த பிளையாடிஸ் பருவகாலம் ஜூலை 2 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பருவகாலம் இப்பகுதியில் கோடைக்கால வானிலை நிலைகளின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜெமினி (Gemini), அல் மர்ஸம் (Al Marzam) மற்றும் அல் குலைபியின் (Al Kulaibiyin) ஆகிய பாரம்பரிய பருவகால கட்டங்கள் வருகின்றன.

ADVERTISEMENT

இக்கட்டங்களில், நாடு முழுவதும் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வறட்சி ஆகியவை படிப்படியாக அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, இக்காலத்தில் பகல்நேர சராசரி வெப்பநிலை பொதுவாக 40°C முதல் 43°C வரை இருக்கும் என்றும், இரவுநேர வெப்பநிலை 28°C முதல் 31°C வரை இருக்கும் என்றும் அல் ஜர்வான் தெரிவித்துள்ளார்.

இப்பருவகாலம் அவ்வப்போது ஏற்படும் வெப்ப அலைகளுக்கும் பெயர் பெற்றது. எனவே, இக்காலகட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்து பல நாட்களுக்குப் பருவகால சராசரியை விட குறைந்தது 4°C வரை உயரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘அல் பவாரிஹ்’ (Al Bawarih) என்று அழைக்கப்படும் வலுவான வடமேற்கு காற்று இந்த வெப்ப அலைகளுடன் வீசக்கூடும். இது தூசி மற்றும் மணல் புயல்களைக் கொண்டுவரும். இதனிடையே, ‘சமூம்’ (Samoom) எனப்படும் வறண்ட வடதிசைக் காற்றும் வீசக்கூடும், இது கடுமையான கோடைக்கால நிலைகளை மேலும் தீவிரப்படுத்தும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ஜூன் 21 அன்று ஆண்டின் மிக நீண்ட பகலையும் மிகக் குறுகிய இரவையும் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இந்த நேரத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் நண்பகல் நிழல்கள் மிகக் குறைவாகிவிடும், மேலும் சில தெற்குப் பகுதிகளில் அவை கிட்டத்தட்ட மறைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel