புதிய போக்குவரத்து சேவைகள், புதுப்பிக்கப்பட்ட அரசு விதிமுறைகள், பள்ளி விடுமுறைகள் மற்றும் குடியிருப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் பெருமளவிலான இந்தியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அறிவிப்புகள் என, ஜூலை மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன.
எமிரேட்களுக்கு இடையிலான முதல் பயணிகள் ரயில் சேவை மற்றும் கோடைக்காலப் பள்ளி விடுமுறைத் தொடக்கம் முதல், இந்திய பாஸ்போர்ட் கட்டண உயர்வு, ஷார்ஜாவில் நீட்டிக்கப்பட்ட கட்டண பார்க்கிங் நேரம், ‘துபாய் சம்மர் சர்ப்ரைசஸ்’ (Dubai Summer Surprises) மற்றும் புதிய வணிக விதிமுறை இணக்கத் தேவைகள் வரை பல முக்கிய மாற்றங்கள் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன.
ஜூலை 1 முதல் குடியிருப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறு முக்கிய மாற்றங்கள் இங்கே:
1. எதிஹாட் ரயில் (Etihad Rail) பயணிகள் சேவைகள்
அபுதாபி மற்றும் ஃபுஜைரா இடையே எதிஹாட் ரயில் பயணிகள் சேவையைத் தொடங்குவதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் ரயில் கட்டமைப்பு ஒரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறது.
இதன் தொடக்க சேவை ஜூன் 30 அன்று தொடங்கினாலும், பயணிகள் ஜூலை மாதம் முழுவதும் இச்சேவையை முன்பதிவு செய்து பயன்படுத்தலாம். அதுமட்டுமில்லாமல், இந்த ரயில் சேவைக்கு பொதுமக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஜூன் 23 அன்று முன்பதிவு தொடங்கிய உடனேயே, முதல் நாளில் திட்டமிடப்பட்ட மூன்று சேவைகளுக்கான அனைத்து இருக்கைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்தது.
இந்த ரயில் கட்டமைப்பு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்:
- செப்டம்பர் 30, 2026: துபாய் மற்றும் அல்-தைத் (Al Dhaid) நிலையங்கள் திறக்கப்படும்.
- டிசம்பர் 30, 2026: அல்-தஃப்ரா (Al Dhafra) நிலையங்கள் செயல்பாட்டைத் தொடங்கும்.
- மார்ச் 30, 2027: ஷார்ஜா நிலையம் திறக்கப்பட்டு, தேசிய பயணிகள் ரயில் கட்டமைப்பு முழுமையடையும்.
2. இந்திய பாஸ்போர்ட் கட்டண உயர்வு
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் ஜூலை மாதத்தில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன.
ஜூலை 1 முதல், திருத்தப்பட்ட பாஸ்போர்ட் விதிகளின் கீழ், மாற்றியமைக்கப்பட்ட பாஸ்போர்ட் கட்டணங்களை அமல்படுத்தவுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் முதல் கட்டண மாற்றமாகும். அதன்படி, பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்கள் 75 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் இதற்கான இறுதி கட்டணங்களை அமீரக திர்ஹம் (AED) மதிப்பில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், ‘Alhind Tours and Travels LLC’ நிறுவனம், முந்தைய சேவை வழங்குநர்களுக்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் புதிய இந்தியத் தூதரக விண்ணப்ப மையங்களை (ICAC) அதிகாரப்பூர்வமாக இயக்கத் தொடங்கும். புதிய அமைப்பு, பாஸ்போர்ட் புதுப்பித்தல், OCI சேவைகள், விசா விண்ணப்பங்கள், காவல்துறை அனுமதிச் சான்றிதழ்கள் (PCCs) மற்றும் ஆவணச் சான்றளிப்பு ஆகியவற்றை ஒரே தளத்தின் மூலம் வழங்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 19 திர்ஹம்ஸ் என்ற நிலையான சேவைக் கட்டணம் பொருந்தும், அதே நேரத்தில் ஐந்து வேலை நாட்களுக்குள் அப்பாயிண்ட்மெண்ட் நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஐக்கிய அரபு அமீரகப் பள்ளிகளில் கோடை விடுமுறை
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள மாணவர்கள், வெள்ளிக்கிழமை, ஜூலை 3 அன்று பள்ளிகள் மூடப்பட்ட பிறகு, தங்களின் வருடாந்திர கோடை விடுமுறையை அனுபவிக்கலாம்.
இந்த விடுமுறை சுமார் எட்டு வாரங்கள் நீடிக்கும், மேலும் புதிய கல்வியாண்டு திங்கட்கிழமை, ஆகஸ்ட் 31, 2026 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பல குடும்பங்கள் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதால், இந்த விடுமுறை வெளிநாட்டுப் பயணங்களில் வருடாந்திர அதிகரிப்பைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. ஷார்ஜாவில் கட்டண பார்க்கிங் நேரம் நீட்டிப்பு
ஷார்ஜாவில் உள்ள வாகன ஓட்டிகள் ஜூலை 1 முதல் பார்க்கிங் நேரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில், ஷார்ஜா முனிசிபாலிட்டி, கட்டணப் பொது பார்க்கிங் நேரத்தை நள்ளிரவு வரை நீட்டித்துள்ளது, இதன் மூலம் அனைத்து பார்க்கிங் இடங்களும் ஒரே ஒருங்கிணைந்த அட்டவணையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஷார்ஜா சிட்டி, கல்பா, கோர்ஃபக்கான் மற்றும் அல் தைத் ஆகிய பகுதிகளில் திருத்தப்பட்ட நேரங்கள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கட்டண பார்க்கிங் தினமும் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும்.
குறிக்கப்பட்ட ஏழு நாள் கட்டண பார்க்கிங் மண்டலங்களைத் தவிர, வெள்ளிக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் பார்க்கிங் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது’.
5. துபாய் சம்மர் சர்ப்ரைசஸ்
துபாயின் மிகப்பெரிய கோடைக்கால ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்குத் திருவிழா ஜூலை 2 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறவிருக்கிறது.
துபாய் சம்மர் சர்ப்ரைசஸின் (DSS) 29வது பதிப்பில், இந்த ஆண்டின் கருப்பொருளான “Make it a dubai summer” என்பதன் கீழ், 60 நாட்கள் விற்பனைத் தள்ளுபடிகள், இசை நிகழ்ச்சிகள், நேரடிப் பொழுதுபோக்கு, குடும்ப நடவடிக்கைகள், ஹோட்டல் சலுகைகள் மற்றும் உணவு ப்ரோமோஷன் இடம்பெறும்.
இந்தத் திருவிழா முழுவதும், குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் முக்கிய ஷாப்பிங் ப்ரோமோஷன்கள், பிரபலங்களின் நிகழ்ச்சிகள், ராஃபிள்கள், குழந்தைகளுக்கான ஈர்ப்புகள் மற்றும் நகரம் தழுவிய பொழுதுபோக்குகளை எதிர்பார்க்கலாம்.
6. கட்டாய இ-விலைப்பட்டியல் (e-invoicing)
ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் வணிகங்களுக்கு, ஜூலை மாதம் ஒரு முக்கியமான இணக்கக் காலக்கெடுவாகவும் அமைகிறது.
ஜூலை 1 ஆம் தேதிக்குள், வரவிருக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப தங்கள் நிதி அமைப்புகளை மாற்றியமைக்க, அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநரை (ASP) நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை, ஐக்கிய அரபு அமீரகத்தின் இ- விலைப்பட்டியல் கட்டமைப்பில் முதல் முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. மேலும் இது வரி அறிக்கையிடல் மற்றும் வணிகப் பரிவர்த்தனைகளை நவீனமயமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநருடன் இன்னும் இணையாத வணிக நிறுவனங்கள், எதிர்கால விதிமுறை இணக்கத்தை உறுதி செய்யவும் இடையூறுகளைத் தவிர்க்கவும், அந்தச் செயல்முறையை விரைவாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
மேற்கண்ட புதிய போக்குவரத்து வசதிகள், விதிமுறை மாற்றங்கள், பள்ளி விடுமுறைகள் மற்றும் முக்கிய விற்பனை நிகழ்வுகள் என அனைத்தும் அடுத்தடுத்த நாட்களில் வருவதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு ஜூலை மாதம் ஆண்டின் மிகவும் பரபரப்பான மாதங்களில் ஒன்றாக அமையவுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel