ஷார்ஜாவில் உள்ள அல்ஜடா பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள் இனி பார்க்கிங் இடத்திற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில், துபாயின் மிகப்பெரிய பொது பார்க்கிங் ஆப்பரேட்டரான ‘Parkin’ நிறுவனம் ஜூலை 15 முதல் இப்பகுதி முழுவதும் புதிய கட்டண பார்க்கிங் முறையை அறிமுகப்படுத்துகிறது.
இத்திட்டம் தானியங்கி வாகன எண் பலகை கண்டறியும் (Automatic Number Plate Recognition-ANPR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் டிக்கெட்டுகள் அல்லது நேரடி கட்டண இயந்திரங்கள் இல்லாமலேயே பார்க்கிங் மண்டலங்களுக்குள் நுழையவும் வெளியேறவும் முடியும்.
இந்த புதிய முறை, குறிப்பிட்ட சாலை ஓர (on-street), சாலைக்கு வெளியே உள்ள (off-street) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலைய (retail) பார்க்கிங் இடங்களை உள்ளடக்கியது. அதுமட்டுமில்லாமல், தகுதியான இடங்களில் பருவக்கால சந்தா (seasonal subscription) விருப்பங்களும் கிடைக்கின்றன.
சமீபத்திய அறிவிப்பின்படி, பார்க்கிங் கட்டண விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
பார்க்கிங் கட்டணங்கள்
புதிய கட்டண அமைப்பின்படி:
- கிழக்கு பவுல்வர்டு (East Boulevard) சாலை ஓர பார்க்கிங்: ஒரு மணி நேரத்திற்கு 6.30 திர்ஹம் (VAT உட்பட); இது நாள் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும்.
- சாலைக்கு வெளியே உள்ள மற்றும் ஒதுக்கப்பட்ட பார்க்கிங்: ஒரு மணி நேரத்திற்கு 4.20 திர்ஹம் (VAT உட்பட); இது காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை பொருந்தும்.
- தி பவுல்வர்டு (The Boulevard), திராஸ் மற்றும் மிஸ்க் ஆகிய இடங்களில் உள்ள சில்லறை விற்பனை நிலைய பார்க்கிங்: முதல் இரண்டு மணி நேரம் இலவசம். அதன் பிறகு வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரத்திற்கு 10 திர்ஹம் செலுத்த வேண்டும்.
அதேசமயம், குடியிருப்பாளர்கள் தங்கள் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்கள் அல்லது உரிமைப் பத்திரங்களில் (Title Deeds) குறிப்பிடப்பட்டுள்ள பார்க்கிங் வசதிகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும், ஆனால் கூடுதல் பார்க்கிங் தேவைக்கு புதிய கட்டண விதிகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் Parkin-இன் தற்போதைய டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் குடியிருப்பாளர்கள் நிறுவனத்தின் டிஜிட்டல் தளம் மூலம் பருவக்கால சந்தாக்களை நிர்வகிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண பார்க்கிங் திட்டம் 2026 மற்றும் 2030 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்ஜடா முழுவதும் மொத்தம் 9,900 பார்க்கிங் இடங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 3,500 இடங்கள் சாலை ஓரம் மற்றும் சாலைக்கு வெளியே அமைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் 2026-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் தொடக்கத்தில் சுமார் 1,400 இடங்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பார்க்கின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அப்துல்லா அல் அலி கூறுகையில், இந்த அமைப்பு ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் திறமையான பார்க்கிங் மேலாண்மை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, குடியிருப்பாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்குச் சுமூகமான அனுபவத்தை வழங்குவதோடு, பார்க்கிங் இடங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மையங்களில் ஒன்றான அல்ஜடாவின் (Aljada) வளர்ந்து வரும் சமூகத்திற்கு, அதன் அளவிற்கு ஏற்ற பார்க்கிங் கட்டமைப்பை வழங்குவதன் மூலம் இந்தக்கூட்டு முயற்சி ஆதரவளிக்கும் என்று ‘அராடா’ (Arada) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல்கோஷைபி தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel