ஐக்கிய அரபு அமீரகம் தனது தேசிய அட்டை கட்டணத் திட்டமான ‘ஜேவான்’ (Jaywan)-ஐ அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, அமீரகத்தில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் உரிமம் பெற்ற பணப் பரிமாற்ற நிறுவனங்கள் இந்த அட்டைகளை கட்டம் கட்டமாக வழங்கத் தொடங்கியுள்ளன. இது அமீரகத்தின் டிஜிட்டல் கட்டணச் சூழலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், துணைப் பிரதமரும், ஜனாதிபதி அலுவலக அமைச்சரும், மத்திய வங்கியின் நிர்வாகக் குழுத் தலைவருமான ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் தலைமையில் திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த அட்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அமீரகம் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் ஏற்கனவே ஜெய்வான் அட்டைகளை வழங்கத் தொடங்கிவிட்டன. மேலும், வரும் மாதங்களிலும் இந்த விநியோகப் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேவான் கார்ட் என்றால் என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்திற்காகவே பிரத்யேகமாக அமீரக அரசால் உருவாக்கப்பட்ட ‘ஜேவான்’, நாட்டின் தேசிய அட்டை கட்டணத் திட்டமாகும். இது சர்வதேச அளவில் வழங்கப்படும் டெபிட் மற்றும் ப்ரீபெய்ட் (prepaid) அட்டைகளுக்கு மாற்றாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு சேவையை வழங்குகிறது.
நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதித் துறை வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில், பாதுகாப்பான, திறமையான மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணத் தீர்வை வழங்குவதன் மூலம் அமீரகத்தின் கட்டண உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஜேவான் கார்டினை எங்கு பயன்படுத்தலாம்?
அதிகாரிகளின் அறிவிப்பின்படி, அனைத்து வகையான ஜேவான் கார்டுகளையும் பின்வரும் இடங்களில் பயன்படுத்தலாம்:
- விற்பனை முனையங்கள் (POS terminals)
- இணையவழி வர்த்தகத் தளங்கள் (E-commerce platforms)
- ஏடிஎம் இயந்திரங்கள் (ATMs)
- டிஜிட்டல் வாலட் (Digital wallets)
இந்த அட்டைகள் பின்வருவனவற்றை ஆதரிக்கின்றன:
- தொடுதலில்லா கட்டணச் சேவைகள் (Contactless payments)
- இணையவழி ஷாப்பிங்
- ரொக்கப் பணம் எடுத்தல்
- உள்நாட்டுப் பரிவர்த்தனைகள்
- அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சர்வதேசக் கட்டணச் சேவைகள்
அதுமட்டுமில்லாமல், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியக் கூட்டாளர்களுடனான ஒப்பந்தங்கள் மூலம், ஜேவான் கார்டு வைத்திருப்பவர்கள் பயணம், சில்லறை வர்த்தகம் மற்றும் ஷாப்பிங், விருந்தோம்பல் மற்றும் வாழ்க்கை முறை சேவைகள் ஆகியவற்றில் பிரத்யேக நன்மைகள் மற்றும் சலுகைகளைப் பெற முடியும். இத்துறைகளில் அடங்குவன.
அமீரகத்தின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஆதரவு
இந்த அறிமுகமானது, நாட்டின் தேசிய கட்டண முறையை வலுப்படுத்துவதற்கும், நிதி உள்கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் அமீரகம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
ஜேவான் அட்டையின் அறிமுகமானது, அமீரகத்தின் பரந்த பொருளாதார மற்றும் புத்தாக்க நோக்கங்களை ஆதரிப்பதோடு, மிகவும் வலுவான மற்றும் சுயசார்பு கொண்ட கட்டணச் சூழலை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel