சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், ‘மல்டிபிள்-என்ட்ரி’ (பலமுறை நுழையக்கூடிய) என்ற முறையில் புதிய உம்ரா விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விசாவானது, விசா வழங்கப்பட்ட தேதியிலிருந்து 365 நாட்கள் காலத்திற்குள் புனிதப் பயணிகள் சவுதி அரேபியாவிற்குப் பலமுறை பயணம் செய்ய அனுமதிக்கிறது.
உம்ரா பயணிகளுக்கான டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் அதே வேளையில், பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் வகையில் இந்த புதிய விசா வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விசா வழங்கப்பட்ட தேதியிலிருந்து 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதன் மூலம் விசா வைத்திருப்பவர்கள் அக்குறிப்பிட்ட காலத்திற்குள் சவுதி அரேபியாவிற்குப் பலமுறை பயணம் செய்யலாம்.
இருப்பினும், ஒவ்வொரு முறை பயணம் செய்வதற்கு முன்பும், பயணிகள் ‘நுசுக்’ (Nusuk) தளம் வழியாக அங்கீகரிக்கப்பட்ட உம்ரா சேவைத் தொகுப்பை (service package) வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போதும் சவுதியில் தங்கும் காலம் 90 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், பயணிகள் பயண மற்றும் நுழைவு தொடர்பான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த விசா வைத்திருப்பவர்கள் பயணம் செய்வதற்கு முன் ‘நுசுக்’ செயலி வழியாக உம்ரா அனுமதிச் சீட்டையும் (permit) பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகள், அந்தப் பயணத்திற்காக வாங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சேவைத் தொகுப்பின் தேதிகளுடன் ஒத்துப்போக வேண்டும்.
முதல் பயணம் மற்றும் அடுத்தடுத்த பயணங்கள்
முதல் பயணத்திற்கு, விண்ணப்பதாரர்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
- ‘நுசுக்’ (Nusuk) தளம் வழியாக அங்கீகரிக்கப்பட்ட சேவைத் தொகுப்பை வாங்க வேண்டும்.
- ‘மல்டிபிள்-என்ட்ரி’ உம்ரா விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- பயணம் செய்வதற்கு முன் தேவையான அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
அத்துடன், விசாவின் மீதமுள்ள செல்லுபடியாகும் காலத்தைக் கணக்கிட, சவுதி அதிகாரிகள் வருகை மற்றும் வெளியேறும் விவரங்களைப் பதிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
அடுத்தடுத்த பயணங்களுக்கு, பயணிகள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
- புதிய அங்கீகரிக்கப்பட்ட சேவைத் தொகுப்பை வாங்க வேண்டும்.
- ‘நுசுக்’ செயலி வழியாக புதிய உம்ரா அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- மீண்டும் சவுதி அரேபியாவிற்குப் பயணம் செய்வதற்கு முன் அனைத்து நுழைவு நடைமுறைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
அதுமட்டுமில்லாம்ல, சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறிய பிறகு விசா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தேவையான சேவைத் தொகுப்பு, அனுமதிச் சீட்டு மற்றும் பயண நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், எதிர்காலப் பயணங்களுக்காக அது மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த ‘மல்டிபிள்-என்ட்ரி’ உம்ரா விசாவை ஹஜ் பருவத்தில் பயன்படுத்த முடியாது என்பதை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அமைச்சகத்தின் தகவலின்படி, சவூதி அரேபியாவின் ஹஜ் விதிமுறைகளுக்கு இணங்க, துல் கஃதா மாதம் 1-ஆம் தேதி முதல் துல் ஹஜ் மாதம் 13-ஆம் தேதி வரை இந்த விசாவின் கீழ் நாட்டிற்குள் நுழைவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதன் மூலம் உம்ரா பயணத்தை எளிதாக்குவதும், அதே வேளையில் நாட்டின் டிஜிட்டல் புனிதப் பயணச் சேவைகளை வலுப்படுத்தி வருகையாளர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதும் இந்த புதிய விசாவின் நோக்கம் என்று ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel