வெளிநாட்டவர்களையும் சுற்றுலாவாசிகளையும் கவர பல்வேறு புதுப்புது யுக்திகளை கையாண்டு வரும் துபாய் எமிரேட், தற்பொழுது கவர்ச்சிகரமான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்பம் அல்லது நண்பர்களை விசிட்டில் அழைத்து வந்தால் 3,000 திர்ஹம் மதிப்புள்ள தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
வரக்கூடிய மாதங்களில் துபாயின் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள, ‘துபாய் இன்வைட்’ (Dubai Invite) எனும் புதிய திட்டத்தின் கீழ் இந்த சலுகை வழங்கப்படுகின்றது. இதில் மக்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும். அதாவது ஹோட்டல் முன்பதிவுகளில் சேமிப்பு முதல் சுற்றுலாத் தலங்களில் இலவசமாகப் பொழுதைக் கழிப்பது வரை பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சலுகையானது ஜூலை 20 முதல் அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை துபாய் நகரத்திற்கு விசிட்டில் தங்க அழைக்கும் ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டமானது, பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையின் காரணமாக கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் துபாயின் விருந்தோம்பல் துறைக்கு முக்கிய ஆதரவை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம், குடியிருப்பாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை வரவேற்கவும், ஹோட்டல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த அனுபவங்களில் பிரத்யேகச் சலுகைகளைப் பெறவும் வழிவகுக்கிறது.
பங்கேற்பது எப்படி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் துபாய்க்கு விசிட்டில் வரவழைப்பதன் மூலமாகவும், ‘விசிட் துபாய்’ (Visit Dubai- https://t.co/J3TFhBYK96) இணையதளத்தில் உள்ள ஆன்லைன் படிவத்தின் மூலம் துபாய்க்கு வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் வருகை தேதியைப் பதிவு செய்வதன் மூலமாகவும் இத்திட்டத்தின் பலனைப் பெறலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையாளர்கள் துபாய் நகரத்திற்கு வருகை தரும்போது, அது குறித்த தகவல் உடனடியாக ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
அதனை தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட பார்வையாளர்கள் துபாய்க்கு வந்தடைந்ததும், பங்கேற்பாளர்களுக்கு மூன்று வேலை நாட்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பப்படும். அதில் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் சலுகைகளைப் பெறுவது மற்றும் பயன்படுத்துவது குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
அதே நேரத்தில் பங்கேற்பாளர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, செல்லுபடியாகும் எமிரேட்ஸ் அடையாள அட்டை (Emirates ID) கொண்ட ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் உரிய சுற்றுலா விசாவைக் கொண்டிருக்க வேண்டும்.
சலுகைகள்
மெலியா டெசர்ட் பாம் ஹோட்டலில் உள்ள அனைத்து அறைகள், சூட்கள் மற்றும் வில்லாக்களுக்கு 45 சதவீத தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு ஹோட்டல்களில் தங்க சலுகை கிடைக்கும். அத்துடன் இதர சலுகைகளில், அக்வாவென்ச்சர் வேர்ல்டுக்கான (Aquaventure world) இலவச டிக்கெட், IMG வேர்ல்ட்ஸ் ஆஃப் அட்வென்ச்சரில் ஒரு நாள் இலவசப் பயணம், கிராண்ட் ஹயாட் துபாய் வாட்டர்பார்க்கில் 50 சதவீதத் தள்ளுபடி மற்றும் பல உணவக சலுகைகளும் இந்த திட்டத்தில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.