ADVERTISEMENT

கோடைக்கு மத்தியில் ஷார்ஜாவில் பலத்த மழை: பள்ளத்தாக்குகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்!!

Published: 25 Jul 2026, 8:50 PM |
Updated: 25 Jul 2026, 8:50 PM |
Posted By: Menaka

சனிக்கிழமை மதியம் ஷார்ஜாவின் கிழக்கு பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவானதைத் தொடர்ந்து, அல் தைத் மற்றும் சுஹைலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் உள்ள வாதிகளில் (பள்ளத்தாக்கு நீரோடைகளில்) நீர் பெருக்கெடுத்து ஓடியது.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) முன்னதாகவே வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்றும், சனிக்கிழமை மாலை 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழையும், சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்திருந்தது.

அல் தைத் பகுதியிலிருந்து பகிரப்பட்டவீடியோக்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகியிருந்தது. மேலும், பலத்த மழையைத் தொடர்ந்து அல் தைத் மற்றும் சுஹைலா பகுதிக்கு அருகிலுள்ள வாதிகளில் மழைநீர் நிரம்பி ஓடிய காட்சிகளும் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளில் வானிலை பொதுவாக சீராக இருந்தது. காலை வேளையில் கிழக்கு பகுதிகளில் குறைந்த உயரத்தில் மேகங்கள் காணப்பட்டதோடு, வெப்பநிலையில் சற்று குறைவும் பதிவானதாகக் கூறப்படுகிறது.

மேலும், இன்று இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும் என்றும், சில கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் மூடுபனி அல்லது பனிமூட்டம் உருவாகி பார்வைத்திறனைக் குறைக்க வாய்ப்புள்ளதாகவும் NCM எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், காற்றின் வேகம் லேசானது முதல் மிதமானதாக (மணிக்கு 30 கி.மீ வரை) இருக்கும் என்றும், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் ஆகிய பகுதிகளில் கடல் நிலை அமைதியாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் மேலும் மழைக்கு வாய்ப்பு

இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும், திங்கட்கிழமை காலையில் மீண்டும் மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, திங்கள் முதல் புதன் வரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் மீண்டும் உருவாகக்கூடும். இதனால் மதிய வேளையில் மழை பெய்யவும், மணிக்கு 40 கி.மீ வேகத்தில் காற்று வீசவும், திறந்தவெளிகளில் தூசி எழும்பவும், அரேபிய வளைகுடாவின் சில பகுதிகளில் கடல் அவ்வப்போது சீற்றமாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel