ADVERTISEMENT

அமீரகத்தில் இன்றும் தொடர்ந்த மழைப்பொழிவு.. துபாய் மற்றும் அல் அய்ன் பகுதிகளில் கனமழை!!

Published: 29 Jul 2026, 8:48 PM |
Updated: 29 Jul 2026, 8:52 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் கடந்த ஒரு சில தினங்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் அதன் தாக்கம் இன்றும் காணப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) மதியம் ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் கார்மேகங்கள் சூழ்ந்தன. மேலும், நாட்டின் பல பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் புழுதிப் புயல் ஆகியவை வீசின. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவினாலும், துபாய், அல் அய்ன் மற்றும் பிற கிழக்கு பிராந்தியங்களின் சில பகுதிகளில் வெப்பச்சலன மேகங்களின் செயல்பாட்டால் இந்த திடீர் மழைப்பொழிவு ஏற்பட்டது.

ADVERTISEMENT

நாட்டின் சில பகுதிகளில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய நிலையற்ற வானிலை நிலவும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) முன்னதாகவே எச்சரித்திருந்தது.

NCM வெளியிட்ட தகவலின்படி, கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களின் சில பகுதிகளில் உருவான வெப்பச்சலன மேகங்கள் உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பரவியதால், ஆங்காங்கே மழையும் பலத்த காற்றும் வீசின.

ADVERTISEMENT

அல் அய்ன் நகருக்கு வடக்கே உள்ள அல் ஷுவைப் சாலையில் (Al Shuwaib Road) கனமழை பெய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் காணலாம். நிலையற்ற வானிலை எமிரேட் முழுவதும் பரவியதால், புதன்கிழமை மாலை துபாயின் சில பகுதிகளிலும் மழை பெய்தது.

இதற்கிடையில், சில பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசியது. இதனால் தூசியும் மணலும் காற்றில் கிளம்பியதுடன், பல இடங்களில் கிடைமட்டப் பார்வைத்திறன் கணிசமாகக் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஆகவே, புழுதி மற்றும் திடீர் மழையால் பார்வைத்திறன் குறையும் நேரங்களில் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெப்பச்சலன மேகங்களின் செயல்பாட்டின் போது வானிலை நிலைமைகள் விரைவாக மாறக்கூடும் என்பதால், பொதுமக்கள் சமீபத்திய வானிலை முன்னறிவிப்புகளைக் கவனிக்குமாறும், NCM வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து இந்த வானிலை மாற்றத்தைக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை மோசமடைந்தால் கூடுதல் தகவல்களுக்குத் தயாராக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel