ADVERTISEMENT

எதிஹாட் ரயிலுக்கு அமோக வரவேற்பு.. 70,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை!

Published: 5 Aug 2026, 5:13 PM |
Updated: 5 Aug 2026, 5:13 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ரயில் வலையமைப்பில் எதிஹாட் ரயிலின் பயணிகள் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, 70,000-க்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நாடு முழுவதும் ரயில் பயணத்தின் மீது பொதுமக்களுக்கு அதிகரித்து வரும் ஆர்வத்தைக் காட்டுகிறது.

ADVERTISEMENT

அமீரகம் முழுவதும் ரயில் பயணம் பிரபலமடைந்து வருவதால், பயணிகள் இப்போது சராசரியாக 12 நாட்களுக்கு முன்பே தங்கள் பயணங்களை முன்பதிவு செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, பல பயணிகள் இந்தச் சேவையை ஒருமுறை மட்டும் அனுபவிக்கும் விஷயமாகப் பார்க்காமல், வணிகப் பயணங்கள், குடும்பச் சுற்றுலாக்கள் மற்றும் ஓய்வு நேரப் பயணங்களை ரயில் அட்டவணைக்கு ஏற்பத் திட்டமிடத் தொடங்கியிருப்பதைக் குறிக்கிறது.

இது குறித்து எதிஹாட் ரயிலின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) அஸ்ஸா அல் சுவைதி (Azza Al Suwaidi) அவர்கள் பேசுகையில், இந்த முன்பதிவுப் போக்கு, ரயில் பயணம் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு வழக்கமான பயணத் தேர்வாக மாறத் தொடங்கியிருப்பதைக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், குடும்பங்கள், வணிகப் பயணிகள், பள்ளி மாணவர்கள் குழுக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சிறப்புத் தேவை உள்ளவர்கள் (People of Determination) எனப் பல்வேறு தரப்பட்ட பயணிகளிடமிருந்து தேவை எழுந்துள்ளதாகவும் எதிஹாட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகளின் இந்த பன்முகத்தன்மை, பல்வேறு பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ரயில்வேயின் வளர்ந்து வரும் பங்கை பிரதிபலிக்கிறது என்று எதிஹாட் ரயில் மொபிலிட்டியின் வணிகப் பிரிவு நிர்வாக இயக்குனர் அத்ரா அல்மன்சூரி (Adhraa Almansoori) குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து பேசிய அவர், “குடும்பப் பயணங்கள், வணிகப் பயணங்கள், கல்விச் சுற்றுலாவாகச் செல்லுதல், ஓய்வு நேர அனுபவங்கள் அல்லது ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் புதிய இடங்களை ஆராய்தல் என எதுவாக இருந்தாலும், பரந்த அளவிலான வாடிக்கையாளர்களிடமிருந்து வலுவான ஆர்வத்தை நாங்கள் காண்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

எதிஹாட் ரயில் தனது அறிமுகச் செயல்பாட்டுக் கட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவதுடன், தேவைக்கேற்ப பயணத் திறன் (capacity) படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் மாதங்களில் பயணிகள் ரயில் வலையமைப்பு குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் காணவுள்ளது. துபாய் மற்றும் அல் தைத் (Al Dhaid) நிலையங்கள் செப்டம்பர் 30-ஆம் தேதியும், அதைத் தொடர்ந்து லிவா (Liwa) மற்றும் மதீனத் சயீத் (Madinat Zayed) நிலையங்கள் நவம்பர் 30-ஆம் தேதியும், அல் தஃப்ரா (Al Dhafra) பகுதியில் கூடுதல் நிலையங்கள் டிசம்பர் 30-ஆம் தேதியும், ஷார்ஜா நிலையம் மார்ச் 30, 2027-ன்றும் திறக்கப்பட உள்ளன.

இந்த விரிவாக்கம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள முக்கிய மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் இடங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தும் என்றும், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இருவருக்கும் ரயில் பயணத்தை மிகவும் வசதியான தேர்வாக மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel