கடுமையான வெப்பம் நிறைந்த பகல் பொழுதும் ஈரப்பதம் மிகுந்த இரவுகளும் கொண்ட கோடைக்காலமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரவுள்ளது. மேலும் ஆண்டின் இறுதி மாதங்களில் நிலவவிருக்கும் இதமான குளிர்ச்சியான வானிலையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது அமீரகத்தில் நிலவும் வெப்பநிலை சற்று குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) தகவலின்படி, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அல் அய்னின் ரக்னா (Raknah) பகுதியில் வெப்பநிலை 18.8°C-ஆகக் குறைந்ததன் மூலம், 2026-ஆம் ஆண்டின் கோடைக்காலத்திலேயே மிகக் குறைந்த வெப்பநிலை அங்கு பதிவாகியுள்ளது.
பொதுவாக அல் அய்னில் உள்ள ரக்னா பகுதி, ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகக் குறைந்த வெப்பநிலையைப் பதிவு செய்யும் இடங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது; குளிர்காலத்தில் இங்கு வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழே (sub-zero) செல்வதும், உறைபனி அல்லது பனிக்கட்டிகள் உருவாவதும் வழக்கமாகும். இந்நிலையில் நேற்று இப்பகுதியில் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இப்பகுதி போலவே வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் வேறு சில இடங்களிலும் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகாலை 4.30 மணிக்கு தம்தா (Damtha) பகுதியில் 21.4°C வெப்பநிலையும், காலை 6.15 மணிக்கு அல் வத்பா 1 (Al Wathbah 1) பகுதியில் 22.3°C வெப்பநிலையும் பதிவாகின.
பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பம் நீடித்தாலும், கோடைக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளதால் இந்த இதமான சூழல் நிலவுகிறது.
வானியல் ரீதியாகப் பார்த்தால், இலையுதிர் கால சம இரவு நாளுடன் (autumnal equinox) செப்டம்பர் 23, புதன்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரும் என கூறப்படுகின்றது. அதே நேரத்தில் ஆகஸ்ட் மாத இறுதியிலும் செப்டம்பரிலும் வெப்பநிலை குறையத் தொடங்கினாலும், மக்கள் தொடர்ந்து வெப்பமான சூழலையே எதிர்பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரவிருக்கும் நாட்களில் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான பருவநிலைக்கு மாறவிருப்பதால், அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமீரக தேசிய வானிலை மையத்தின் வானிலை ஆய்வாளர் அகமது ஹபீப் (Ahmed Habib) தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.