செவ்வாய்க்கிழமையன்று ஈரானிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கைகளின்படி, முதல் ஏவுகணை அமீரகத்தின் கடல் எல்லைக்கு வெளியே விழுந்தது, இரண்டாவது ஏவுகணை நாட்டின் கடல் எல்லைக்குள் விழுந்தது தெரிய வந்துள்ளது.
எனவே, ஐக்கிய அரபு அமீரகம் உயர் எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும், நாட்டை இலக்காகக் கொண்ட எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பதிலளிக்க முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை, அத்துடன் அதன் தேசிய நலன்கள் மற்றும் திறன்களைப் பாதுகாக்க ஐக்கிய அரபு அமீரகப் படைகள் தயாராக இருப்பதாகவும் அது கூறியுள்ளது.
மேலும், நிலைமை தொடர்பான செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு, குடியிருப்பாளர்களும் பொதுமக்களும் அமீரகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களைப் பின்பற்றுமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அதேசமயம், வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்புவதற்கும் நம்புவதற்கும் எதிராக அது மக்களை எச்சரித்துள்ளது.
ஈரானுடனான பரந்த அமெரிக்க-இஸ்ரேல் மோதலின் போது, பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்களைதொடங்கின. ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பிறகு, பிப்ரவரி 28 அன்று முதல் பெரிய தாக்குதல்கள் பதிவாகின. அதைத் தொடர்ந்து, மார்ச் மற்றும் மே மாதங்களில் அமீரகம் தொடர்ச்சியான ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது.
அதையடுத்து, ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, தாக்குதல்கள் குறைந்தது, இருப்பினும் பதட்டங்கள் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. பரந்த ஈரான் மோதலுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயங்களை வளைகுடா நாடுகள் தொடர்ந்து எதிர்கொண்டன.
தற்போது, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மீண்டும் தொடங்கிய மோதல் மற்றும் உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள பதட்டங்கள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel