ஷார்ஜாவின் அழகிய மலைப்பகுதி நகரமான கோர் ஃபக்கான், ஒரு முக்கிய நிர்வாக மற்றும் மேம்பாட்டு மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது. இந்நகரை நான்கு மண்டலங்களாகப் பிரிப்பதற்கும், புதிய குடியிருப்புப் பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் புதிய திட்டத்திற்கு அந்த எமிரேட்டின் ஆட்சியாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த புதிய நிர்வாகப் பிரிவில் கோர் ஃபக்கான் நகரம், அல் அவெய்னாட் (Al Aweinat), அல் சைய் (Al Sayh) மற்றும் அல் சபிகியா (Al Sabihiya) ஆகியவை அடங்கும். இந்த விரிவான திட்டம் அகபத் கோர் ஃபக்கான் (Aqabat Khor Fakkan) முதல் அகபத் அல்-லுலுய்யா (Aqabat Al-Lu’lu’iyah) வரை நீண்டிருப்பதை திட்ட வரைபடம் காட்டுகிறது.
இந்த அறிவிப்பை கூட்டாட்சி சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியின் போது வெளியிட்டுள்ளார்.
புதிய மருத்துவமனைகள்
மேலும், கிழக்குப் பிராந்தியத்தில், குறிப்பாக கல்பா (Kalba) பகுதியில் சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களையும் ஷேக் சுல்தான் அறிவித்துள்ளார். இப்பகுதியில் அதிகரித்து வரும் தேவையால் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, கல்பா, கோர் ஃபக்கான் மற்றும் திப்பா அல் ஹிஸ்ன் (Dibba Al Hisn) ஆகிய இடங்களில், ‘பல்கலைக்கழக மருத்துவமனை – அல் மடம் கிளை’ (University Hospital – Al Madam Branch) மாதிரியிலான புதிய மருத்துவமனைகளை அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டங்கள் விரைவாகச் செயல்படுத்தப்படும் என்று ஆட்சியாளர் கூறியுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின் படி, கட்டுமானப் பணிகள் தொடங்கியதும், மருத்துவமனைகள் கட்டி முடிக்க சுமார் ஐந்து முதல் ஆறு மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாட்டுத் திட்டங்களில் பசுமை மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் அடங்கும்.
இப்பகுதியின் பல்வேறு இடங்களில் அடர்த்தியான, பழம் தரும் மரங்களை நடும் பணி சிறப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ஷேக் சுல்தான் கூறியுள்ளார். குறிப்பாக, இயற்கைச் சூழலை ஆதரிக்கும் வகையில் சிறிய விலங்குகள் மற்றும் நன்மை பயக்கும் பூச்சிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்களும் இதில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இவற்றுடன் புதிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்க சில மலைப்பகுதிகளும் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியிருப்புப் பகுதி மன்றங்களின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்து புறநகர் விவகாரத் துறையுடன் (Suburbs Affairs Department) ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் ஆட்சியாளர் கூறியுள்ளார்.
உள்ளூர் குடியிருப்புப் பகுதி அதிகாரிகள், குடியிருப்பாளர்களுக்கும் தலைமைக்கும் இடையே நேரடித் தொடர்பாளர்களாகச் செயல்பட்டு, சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷார்ஜா தனது தனித்துவமான மலைப்பகுதி நிலப்பரப்பு மற்றும் கடற்கரைச் சூழலைப் பாதுகாத்துக்கொண்டே கோர் ஃபக்கானை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே புதிய குடியிருப்புப் பகுதிகள், சுகாதார வசதிகள் மற்றும் பசுமையான பொது இடங்கள் ஆகியவை இந்நகருக்காகத் திட்டமிடப்பட்டுள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel