ஐக்கிய அரபு அமீரகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 28) வெள்ளிக்கிழமையன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துபாயில் பொது பார்க்கிங் வசதி இலவசமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மெட்ரோ, டிராம், பேருந்துகள் மற்றும் பிற சேவைகளுக்கான சிறப்பு நேரங்களையும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பின் படி, வருகின்ற வெள்ளிக்கிழமையன்று துபாய் முழுவதும் பொது பார்க்கிங் இலவசமாக இருக்கும். ஆனால் பல அடுக்கு பார்க்கிங் இடங்களில் (multi-storey parking) வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பின்னர், கட்டணம் செலுத்தி வாகனத்தை நிறுத்தும் முறை சனிக்கிழமை, ஆகஸ்ட் 29 அன்று மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் மெட்ரோ மற்றும் டிராம் நேரங்கள்
- துபாய் மெட்ரோ: வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை
- துபாய் டிராம்: வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை
பேருந்து சேவைகள்
மேலும், விடுமுறை நாட்களில் பேருந்து நேர அட்டவணையில் உள்ள மாற்றங்களை அறிய பயணிகள் S’hail செயலியை (app) சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக, அல் குபைபா (Al Ghubaiba) பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபிக்குச் செல்லும் E100 வழித்தடப் பேருந்து சேவை, ஆகஸ்ட் 27 முதல் 30 வரை இயங்காது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இக்காலகட்டத்தில் அபுதாபிக்குச் செல்லும் பயணிகள் இப்ன் பதூதா (Ibn Battuta) பேருந்து நிலையத்திலிருந்து E101 பேருந்து சேவையை பயன்படுத்தலாம்.
RTA மையங்கள்
அதேபோல், பெரும்பாலான RTA வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் (Customer Happiness Centres) வெள்ளிக்கிழமையன்று மூடப்பட்டிருக்கும். இருப்பினும், உம் ரமூல் (Umm Ramool) வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம் மற்றும் தேரா (Deira), அல் பர்ஷா (Al Barsha), அல் த்வார் (Al Twar), அல் கிஃபாஃப் (Al Kifaf) மற்றும் RTA தலைமை அலுவலகத்தில் உள்ள ‘ஸ்மார்ட் மையங்கள்’ (smart centres) தொடர்ந்து செயல்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.
வாகனப் பரிசோதனை மையங்கள்
இதற்கிடையில், பெரும்பாலான வாகனத் தொழில்நுட்பப் பரிசோதனை மையங்கள் வெள்ளிக்கிழமையன்று மூடப்பட்டு, சனிக்கிழமையன்று மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அல் முதாகமேலா அல் குஸ் (Al Mutakamela Al Quoz), அல் முதாகமேலா அல் குசைஸ் (Al Mutakamela Al Qusais), அபெர் (Aber) மற்றும் வாசல் அல் ஜத்தாஃப் (Wasel Al Jaddaf) ஆகிய மையங்கள் காலை 7 மணி முதல் மதியம் வரையிலும், மதியம் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இக்காலகட்டத்தில் வாகனப் பரிசோதனை மற்றும் பதிவு சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்வழிப் போக்குவரத்து
இதேபோல், கடல்வழிப் போக்குவரத்து சேவைகளும் சிறப்பு விடுமுறை கால அட்டவணையைப் பின்பற்றும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் பயணத்தைத் தொடங்கும் முன், சமீபத்திய நேர விவரங்களை அறிய RTA-வின் அதிகாரப்பூர்வத் தகவல் தளங்களைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel